தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை கடந்த 14.05.2010 திகதி இந்தியா மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடித்துள்ளது. அதுமட்டுமல்ல, விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு சட்டவிரோத அமைப்பாகவும் இந்தியா அறிவித்துள்ளது. 1992ம் ஆண்டு முதல் இந்தியாவின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்.....
...கீழ் (Unlawful Activities Prevention Act ) விடுதலைப் புலிகள் மீதான தடை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. விடுதலைப்புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாகக் கூறி, விடுதலைப் புலிகள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் மீது தனது கடுமையான சட்டத்தை ஏவியும் வருகின்றது இந்தியா.
விடுதலைப்புலிகள் மீதான இந்தியாவின் இந்தத் தடை காரணமாக விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நேரடியாக ஏற்பட்டு வருகின்ற பாதிப்புக்கள் ஒரு புறம் இருக்க, ஈழத் தமிழர்களின் நன்மைகள் இந்தத் தடையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன என்பதுதான் உண்மை.
முதலாவதாக இலங்கை இராணுவத்தின் திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் இருந்தும், வெள்ளை வான் வேட்டைகளில் இருந்தும், முட்கம்பிக் கொலைக் களங்களில் இருந்தும் தப்பி ஈழத் தமிழர்கள் தமிழ் நாட்டிற்கு தஞ்சம் தேடி வரும் வழிகளை இந்தியாவின் இந்தத் தடை இரும்புச் சுவர் கொண்டு அடைத்து நிற்கின்றது.
அடுத்ததாக, விடுதலைப்புலிகள் மீது நீடிக்கப்பட்டுள்ள இந்த தடையானது, குறைந்தது அடுத்த இரண்டு வருடங்களுக்காவது ஈழத்தமிழர் தமது அரசியல் நகர்வுகளை தமிழ்நாட்டை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளமுடியாது என்பதை திட்டவட்டமாக அறிவித்து நிற்கின்றது.
அத்தோடு, விடுதலைப்புலிகள் மீதான இந்த தடையை அடிப்படையாக வைத்து, ஈழத் தமிழர்களுக்குச் சார்பாகச் செயற்படும் அல்லது செயற்பட நினைக்கின்ற தமிழ் நாட்டு அரசியல் சக்திகளின் கரங்களையும் முடக்கிப் போடுவதற்கு இந்தியாவின் ஆளும் வர்க்கத்திற்கு அளவற்ற அதிகாரங்களையும் கொடுத்து நிற்கின்றது.
இன்று ஈழத்தமிழரைப் பொறுத்தவரையில் அவர்கள் தங்கள் சொந்த மண்ணில் இருந்து முற்றாகவே விரட்டியடிக்கப்பட்ட நிலையில், எஞ்சி இருப்பவர்கள் அடிமைச் சீவியம் நடத்த நிர்ப்பந்திக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களது எதிர்கால அரசியல் நகர்வென்பது தமிழ் நாட்டிலோ அல்லது புலம்பெயர் நாடுகளிலோதான் மேற்கொள்ளப்படவேண்டி இருக்கின்றது.
இந்தியாவில் புலிகள் மீதான இந்தத் தடை நீடிப்புக் காரணமாக தமிழ் நாட்டை அடிப்படையாகக் கொண்ட ஈழத் தமிழர்களின் அரசியல் நகர்வுகள் ஓரளவு முடக்கப்பட்ட நிலையில், புலம்பெயர் நாடுகளிலேயே ஈழத் தமிழர்களின் எதிர்கால அரசியல் நகர்வுகள் காத்திரமாக முன்நகர்த்தப்படவேண்டிய தேவை இருக்கின்றது.
தமிழர்தான் புலிகள்.. புலிகள்தாம் தமிழர்கள் என்னும் கோஷம் கடந்த ஒரு தசாப்த காலமாக தமிழ் தேசியவாதிகளால் முன்வைக்கப்பட்டு வருகின்றது. பெரும்பாலான ஈழத் தமிழர்களும் நாங்களே விடுதலைப்புலிகள்.. புலிகள் எனப்படுபவர்கள் நாங்கள்தாம் .. என்று கூறிக்கொள்வதில் பெருமையும் அடைந்து கொள்கின்றார்கள்.
ஈழத் தமிழர்களின் கடந்த 30 வருட கால உழைப்புக்கள், கனவுகள், தியாகங்கள் என்பன விடுதலைப்புலிகள் என்ற அமைப்பின் மீதுதான் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன. சாதாரணமாகவே எதற்கும் கணக்குப் பார்த்து, பிரதிபலன் எதிர்பார்த்து முதலிடுகின்ற வழக்கத்தை தமதாகக் கொண்ட ஈழத் தமிழ் சமூகம், விடுதலைப்புலிகளின் போராட்டத்திற்கு என்று பெரும் அளவு நிதியையும், தங்கத்தையும், தமது உழைப்பையும், தமது பிள்ளைகளையும், தமது வாழ்வையுமே வழங்கியிருந்தது ஒன்றும் இலகுவில் மறுத்துவிட முடியாதது.
எனவே விடுதலைப்புலிகள் அமைப்பு அந்த மக்களுக்காகச் செய்யவேண்டிய விடயங்கள் என்று ஏராளம் இருக்கின்றன. எனவே விடுதலைப்புலிகள் அமைப்பின் இருப்பு என்பதும், செயற்பாடுகள் என்பதும் ஈழத் தமிழர்களுக்கு மிகுந்த பாதுகாப்பைத் தேடித்தரக்கூடிய ஒன்றாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது ஒரு பயங்கரவாத அமைப்பாக உலக நாடுகளால் அடையாளப்படுத்தப்பட்டு, விடுதலைப்புலிகள் உலக நாடுகள் பலவற்றால் தடைசெய்யப்பட்ட நிலையில், விடுதலைப்புலிகள் அமைப்பு சர்வதேச ரீதியாக மேற்கொண்டு வரும் நகர்வுகள் என்பது எந்த அளவிற்கு ஈழத் தமிழரது போராட்டத்தை வெற்றிப் பாதையில் கொண்டு நகர்த்த உதவும் என்கின்ற கேள்விக்கு பதில் காணமுடியாமலேயே இருக்கின்றது.
எனவே ஈழத் தமிழர் தமது எதிர்கால அரசியல் இராஜதந்திரப் போராட்டத்தை சர்வதேச அரங்கில் விடுதலைப்புலிகளது தலைமையில் தொடர்ந்து முன்னெடுக்க விரும்பினால், விடுதலைப்புலிகள் மீது சர்வதேச நாடுகள் விதித்துள்ள தடைகளை எவ்வாறு நீக்குவது என்பது பற்றிச் சிந்திப்பது அவசியம்.
அதற்கு முன்னதாக, விடுதலைப்புலிகள் மீது எதற்காக உலக நாடுகள் தடையை விதித்தன என்றும், அந்த தடைகளின் பரிமாணங்கள் என்ன என்றும் சித்திப்பது அவசியம்.
இது பற்றி ஈழத் தமிழர்களும் சிந்திக்கவேண்டும். விடுதலைப்புலிகள் அமைப்பும் சிந்திக்கவேண்டும்.
இன்று விடுதலைப்புலிகள் அமைப்பை உலகில் 32 நாடுகள் தடை செய்து இருக்கின்றன.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தார்கள் என்று குற்றம் சுமாத்தி விடுதலைப்புலிகளை இந்தியா 1992ம் ஆண்டு தடை செய்தது.
அதனைத் தொடர்ந்து அமெரிக்க விடுதலைப்புலிகள் அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் 1997ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ம் திகதி இணைத்துக்கொண்டது. (அமெரிக்கா விடுதலைப்புலிகள் அமைப்பை விஷேட சர்வதேச பயங்கவாதிகள் அமைப்பாக (Specially Designated Global Terrorist) 2.11.2001 இல் பிரகடனம் செய்து தடை செய்துள்ளது)
1998ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளை தடை செய்தது. (இந்தத் தடையை புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து 2002 செப்டெம்பர் 4ம் திகதி நீக்கிய போதும், 2009ம் ஆண்டு ஜனவரி 7ம் திகதி மீண்டும் புலிகள் மீதான தடையை நடைமுறையப்படுத்தியது)
2000ம் ஆண்டு பிரித்தானியா விடுதலைப்புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாகக் கூறி தடை செய்தது.
2006ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 27 நாடுகள் விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் செய்து தடை செய்தன. விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏகப் பிரதிரிகள் என்கின்ற வாதத்தை ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றம் நிராகரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
2006ம் ஆண்டு முதல் விடுதலைப்புலிகளைத் தடை செய்த கனடா, விடுதலைப்புலிகளுக்கு அரசியல் தஞ்சம் வழங்குவதில்லை என்கின்ற கொள்கையையும் கடுமையாகக் கடைப்பிடித்து வருகின்றது.
2001ம் ஆண்டு ஒஸ்ரேலியா விடுதலைப்புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனப்படுத்தி (Resolution 1373) தடைசெய்தது.
இன்று யுத்தம் முடிவடைந்து, விடுதலைப்புலிகள் தங்கள் ஆயுதங்களை மௌனித்ததாக அறிவித்து ஒரு ஆண்டு கடந்துவிட்டுள்ள நிலையிலும், விடுதலைப்புலிகளைத் தடை செய்துள்ள 32 நாடுகளில் எந்த ஒரு நாடும் புலிகள் மீதான தடையை இதுவரை நீக்கவில்லை. அப்படி நீக்குவதான சமிக்ஞையையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை.
சர்வதேச மட்டத்தில் பாரிய அரசியல் இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுக்கவேண்டிய நிலையில் உள்ள தமிழர் தரப்பிற்கு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு விடயமாக இது இருக்கின்றது என்பதில் சந்தேகம் இல்லை.
பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தப்பட்ட நிலையில், முக்கிய ஜனநாயக நாடுகள் அனைத்திலும் தடை செய்யப்பட்ட நிலையில் ஒரு இராஜதந்திர நகர்வை விடுதலைப்புலிகள் தலைமையிலான தமிழர் தரப்பு செய்யவே முடியாது. எனவே, விடுதலைப்புலிகள் மீதான தடையை எவ்வாறு நீங்குவது என்பது பற்றி சிந்தித்தேயாகவேண்டிய கட்டாயத்தில் ஈழத் தமிழினம் இன்று நின்றுகொண்டிருக்கின்றது.
விடுதலைப்புலிகள் மீதான பயங்கரவாதச் சாயத்தை எப்படிப் போக்குவது? விடுதலைப்புலிகள் மீதான தடைகளை எவ்வாறு நீக்குவது?
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவது பற்றிப் பார்ப்பதற்கு, முதலில் விடுதலைப்புலிகள் மீது சுமார் 32 நாடுகள் எதற்காக தடையை விதித்தன என்று பார்ப்பது அவசியம்.
விடுதலைப்புலிகள் மீது மேற்படி இந்த நாடுகள் ஏதற்காகத் தடைகளை விதித்தன என்று பார்க்கின்ற பொழுது, பொதுவாக சில முக்கிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே புலிகள் மீதான தடைகளை அந்நாடுகள் விதித்ததுடன், விடுதலைப்புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாகவும் அடையாளப்படுத்தி வருகின்றார்கள்.
1. விடுதலைப்புலிகள் தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்கின்றார்கள்.
2. விடுதலைப்புலிகள் சிறுவர்களை படைகளில் இணைக்கின்றார்கள்.
3. சர்வதேச ஆயுதக்கடத்தல்களில் ஈடுபடுகின்றார்கள்.
4. ஜனநாயகரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொலை செய்கின்றார்கள்.
பொதுவாகவே இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை அடிப்படையாக வைத்துத்தான் விடுதலைப்புலிகள் மீதான தடைகளை உலக நாடுகள் விதித்திருந்தன.
இதுபோன்ற பொதுவான குற்றச்சாட்டுக்கள் ஒருபுறம் இருக்க, விடுதலைப்புலிகள் மீது இந்த நாடுகள் தடைகளை விதிப்பதற்கும், புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்துவதற்கும் வேறு சில காரணங்களும் கூறப்படுகின்றன.
உதாரணத்திற்கு, விடுதலைப்புலிகள் கடற் கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஒரு குற்றச்சாட்டு சில நாடுகளால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
ஐரிஷ் மோனா (Irish Mona) என்ற கப்பலை 1995ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் விடுதலைப்புலிகள் கடத்தியதாகவும், பிறின்சஸ் வேவ் (Princess Wave) என்ற கப்பலை 1996ம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் புலிகள் கடத்தியதாகவும், அதனா (Athena) என்ற கப்பலை சர்வதேச நீர்பரப்பில் வைத்து 1997ம் ஆண்டு மே மாதம் புலிகள், கடத்தியதாகவும், 1997ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் எம்.வீ. கோடியலி (MV Cordiality ) என்ற கப்பலையும், 1998ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பிரின்சஸ் காஷ் (Princess Kash) என்ற கப்பலையும் 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் எம்.வீ.பாரா-3 (MV Farah III ) என்ற கப்பலையும் சர்வதேச கடற்பரப்பில் வைத்து விடுதலைப்புலிகள் கடத்தியதாகவும் சர்வதேச நாடுகள் குற்றம் சுமத்துகின்றன.
அத்தோடு, 1999ம் ஆண்டு மே மாதம் 25ம் திகதி இந்தியாவில் இருந்து புறப்பட்ட மலேசியாவுக்குச் சொந்தமான எம்.வி. சிக் யங் (MV Sik Yang) என்ற காகோ கப்பல் இலங்கையின் வடக்கு–கிழக்கு கடல் பிரதேசத்தில் வைத்து வைத்து காணாமல் போயிருக்கின்றது. அந்தக் கப்பலில் பயணம் செய்ய 31 மாலுமிகளுக்கும் என்ன நடந்தது என்றும் தெரியவில்லை. அந்தக் கப்பலை விடுதலைப்புலிகளே கடத்தி இருக்கவேண்டும் என்றும், அதனது பெயரை மாற்றி தமது நடவடிக்கைகளுக்கு அந்தக் கப்பலை புலிகள் பயன்படுத்துவதாக சர்வதேச நாடுகள் சில குற்றம் சுமத்துகின்றன.
கனடா, ரொறன்ரோவை அடித்தளமாகக் கொண்டு செயற்படும் மெக்கனைஸ் நிறுவனம் (Mackenzie Institute), உலகளாவிய ரீதியில் திட்டமிட்ட ரீதியாக மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்கள் பற்றிய ஆய்வினைச் செய்துவரும் ஒரு சர்வதே அமைப்பு. விடுதலைப்புலிகளைப் புலிகள் அமைப்பான சர்வதேச ரீதியில் ஆயுதக் கடத்தல்களை மேற்கொண்டு வருவதாக இந்த மெக்கனைஸ் நிறுவனம் (Mackenzie Institute) வெளியிட்ட அறிக்கையானது, சர்வதேச மட்டத்தில் விடுதலைப்புலிகள் தடை செய்யப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.
விடுதலைப்புலிகள் ஆயுத மற்றும் வெடிபொருட்களைக் கடத்திவருவதாகவும் (international arms trafficking), இந்தக் கடத்தல்களுக்கு புலிகள் சர்வதேசக் கடற்பரப்பைப் பயன்படுத்தி வருவதாகவும் இந்த அமைப்பு குற்றம் சுமத்தியிருந்தது. சர்வதேச மட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு மியன்மாரிலும், தாய்லாந்தின் புகெட் பகுதியிலும் தளங்கள் இருப்பதாகவும், தன்சானியாவில் இருந்து இலங்கை அரசாங்கம் கொள்வனது செய்திருந்த 32,400 மோட்டார்களை (81mm) கடத்தியதாகவும் இந்த நிறுவனம் குற்றம் சுமத்தியிருந்தது.
அதேபோன்று விடுதலைப்புலிகள் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் நாடுகளில் பலவந்தமாக நிதிச் சேகரிப்பில் ஈடுபடுவதாகவும், கடல் கொள்ளை, ஆட்களை ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு இரகசியமாகக் கொண்டு செல்லுதல், போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள், ஆயுதக் கடத்தல்கள் போன்றன காரணமாக சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பணம் சேகரிப்பதாகவும் பல சர்வதேச அமைப்புக்கள், பல நாடுகளின் புலனாய்வு அமைப்புக்கள் குற்றம் சுமத்தியிருந்தன.
இவற்றிற்கு மேலாக, விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் சில இஸ்லாமிய போராட்டக் குழுக்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக பரவலாக வெளிவந்த செய்திகள்தாம், மேற்குலகம் விடுதலைப்புலிகள் மீது தடை விதிப்பதற்கும், விடுதலைப்புலிகளுக்கு எதிரான தமது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் காரணமாக அமைந்திருந்தன.
விடுதலைப்புலிகளுக்கும் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாக வெளிவந்த செய்திகளில் பல உண்மைக்குக் புறம்பானவைகளாக, புலிகள் மீது களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கோடு புனையப்பட்டிருந்தாலும் கூட, அதற்கான சாத்தியங்களை புறக்கணிப்பதற்கு மேற்குலகம் தயாராக இருக்கவில்லை என்பதுதான் உண்மை.
70களின் நடுப்பகுதியில் பலஸ்தீன விடுதலை அமைப்பான Popular Front for the Liberation of Palestine என்ற அமைப்பிடம் விடுதலைப்புலிகள் பயிற்சி பெற்றது மாத்திரம் அல்ல, இந்த அமைப்புடன் இணைந்து தெற்கு லெபனானில் புலிகளும் நேரடியாகப் போராடியதற்கான ஆதாரங்களை இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் உலக நாடுகள் சிலவற்றின் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கியிருந்தார்கள்.
அதேபோன்று 1998ம் ஆண்டில் விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்ட பிரகடனம் ஒன்றில், உலகின் முதலாளித்துவதற்கு எதிராக போராடிவரும் சர்வதேச விடுதலைப் போராட்ட சக்திகள், சோசலிச நாடுகள் போன்றனவற்றுடன் கைகோர்த்து நாமும் போராடுவோம் என்று கூறப்பட்டிருந்ததையும், மேற்குலகம் தனது கவனத்தில் எடுத்துக்கொண்டிருந்தது.
இதேபோன்று ஜனநாயத்தின் ஒரு முக்கிய தளம் என்று கூறி அமெரிக்க-பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு வெளிவருகின்ற Westminster Journal என்ற செய்தி ஊடகம், விடுதலைப்புலிகள் அமைப்பு 1990ம் ஆண்டில் மொறோ இஸ்லாமிய விடுதலை முன்னணி (Moro Islamic Liberation Front -MILF) என்ற அமைப்பிற்கும், அபுசையாப் குழு (Abu Sayyaf Group -ASG) என்று அமைப்பிற்கும் பயிற்சி வழங்கியதை மேற்குலகின் புலனாய்வு அமைப்புக்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக தனது ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்திருந்தது. இந்த இரண்டு அமைப்புக்களுமே சர்வதேச பயங்கவாத அமைப்பாக உலகநாடுகளால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அல்கைதாவுடன் தொடர்புபட்ட அமைப்புக்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போன்று இந்திய இஸ்லாமிய போராட்ட அமைப்பான அல் உம்மா (Al Ummah) என்ற அமைப்பிற்கும் விடுதலைப்புலிகள் பயிற்சி வழங்கியதாக இந்தியப் புலனாய்வுப்பிரிவு குற்றம் சுமத்தியிருந்தது.
இதுபோன்ற பரவலான குற்றச்சாட்டுக்கள், திட்டமிட்ட காய் நகர்த்தல்கள் காரணமாக விடுதலைப்புலிகளை சர்வதேச சமூகம் பயங்கரவாதிகளாக, தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பாக அடையாளப்படுத்தும் நிலை உருவானது.
விடுதலைப்புலிகள் மீதான தடைக்கான காரணங்கள் என்று ஆராய்கின்ற பொழுது, அதற்கு விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளும், புலிகளை சர்வதேசப் பொறிக்குள் வீழ்த்தி தடை செய்வதற்காக எதிரிகள் வகுத்த வியூகங்களும் ஒரு காரணம் என்றால், மறுபக்கம் சில ஈழத் தமிழர்கள் தன்னிச்சையாக மேற்கொண்ட நடவடிக்கைகளும் காரணமாக இருந்தன என்பதையும் இங்கு நான் சுட்டிக்காண்பித்துத்தான் ஆகவேண்டும்.
புலம்பெயர்ந்த நாடுகளில் விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர்களாக, விசுவாசிகளாக, பணியாளர்களாக, ஆதரவாளர்களாகச் செயற்பட்ட சில ஈழத் தமிழர்கள் தனிப்பட்ட ரீதியில் மேற்கொண்ட சில சட்டவிரோத நடவடிக்கைகள் கூட, விடுதலைப்புலிகளின் தடைக்கு சில வழிகளில் காரணமாக அமைந்திருந்தன.
உதாரணத்திற்கு, 1993ம் இல் அமெரிக்கவில் உள்ள உலக வர்த்தக மையம் மீது இஸ்லாமிய தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் ரம்சி யூசுப் (Ramzi Yousef) என்பவருக்கு ஒரு ஈழத் தமிழரே போலிக் கடவுச் சீட்டு தயாரித்துக் கொடுத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு போலிக் கடவுச் சீட்டு தயாரித்துக் கொடுத்த நபர் விடுதலைப்புலிகள் அமைப்பின் பகுதி நேரப் பணியாளராக செயற்பட்டிருந்தார். இதனைக் காரணமாக வைத்து ரம்சி யூசுப்பிற்கு விடுதலைப்புலிகள் அமைப்பே போலிக் கடவுச் சீட்டை வழங்கியிருந்ததாக South Asian Terrorism Portal என்ற அமைப்பு குற்றம் சுமத்தியிருந்தது.
இதேபோன்று, கொலம்பியாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒரு ஈழத் தமிழர் கைது செய்யப்பட்ட போழுது, அவர் ஒரு விடுதலைப்புலி செயற்பாட்டாளராக இருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேபோன்று விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டு திரிந்த பலர் தனிப்பட்ட ரீதியில் மேற்கொண்ட பல சட்டவிரோதச் செயல்கள் கூட, விடுதலைப்புலிகள் சர்வதே ரீதியில் தடைசெய்யப்படக் காரணமாக அமைந்திருந்தன.
அத்தோடு, சாதாரணமாக மேற்குலகிற்கு அகதிகளாகப் புலம் பெயர்ந்த பெரும்பாலான மக்கள் தாங்கள் அகதி அந்தஸ்து பெற வேண்டும் என்பதற்காக அந்தந்த நாட்டு அரசாங்கங்களிடம் விடுதலைப்புலிகளை மோசமாகச் சித்தரித்துக் கொடுத்த வாக்கு மூலங்கள் கூட, விடுதலைப்புலிகள் ஒரு மக்கள் போராட்ட அமைப்பு அல்ல என்கின்ற தீர்மானத்தை மேற்குலகம் எடுக்கக் காரணமாக அமைந்திருந்ததாக அண்மையில் என்னுடன் பேசிய மேற்குலகு இராஜதந்திரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
சரி, இப்பொழுது கேள்வி இதுதான்.
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவது எப்படி?
தற்பொழுது யுத்தம் முடிவடைந்து விட்டது. எனவே புலிகள் மீது பிரதானமாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களான: விடுதலைப்புலிகள் தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்கின்றார்கள், விடுதலைப்புலிகள் சிறுவர்களை படைகளில் இணைக்கின்றார்கள், சர்வதேச ஆயுதக்கடத்தல்களில் ஈடுபடுகின்றார்கள், ஜனநாயகரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொலை செய்கின்றார்கள் போன்ற எந்த ஒரு விடயமும் விடுதலைப்புலிகள் தரப்பால் தற்பொழுது செய்யப்படுவதில்லை.
கடந்த ஒரு வருடமாக மேற்குறிப்பிட்ட எந்த ஒரு நடவடிக்கையுமே நடைபெற்றிருக்கவில்லை. விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை முற்றாகவே மௌனித்து, ஜனநாயக வழிகளிலேயே தமது விடுதலையை வென்றெடுக்க விளைகின்றார்கள். எனவே விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பதற்கான முகாந்திரங்கள் பல நாடுகளில் தானாகவே இல்லாமல் போய்விடுகின்றன.
இந்தச் சந்தர்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு விடுதலைப்புலிகள் தரப்பும், உலகத் தமிழ் அமைப்புக்களும் புலிகள் அமைப்பின் மீதான தடையை சர்வதேச மட்டத்தில் நீக்குவதற்கான நகர்வுகளை மேற்கொள்ளவேண்டும்.
முதலாவதாக விடுதலைப்புலிகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் தரப்பினர் தாம் உலக நியதிகளின்படிதான் தமது மக்களுக்கு விடுதலை பெற்றுத்தர ஆவலாக இருக்கின்றோம் என்கின்ற விடயத்தை உலக நாடுகளுக்கு கூற முயலவேண்டும். அடிக்கப் போகின்றார்கள்.. பிடிக்கப் போகின்றார்கள் அதோ அங்கே பத்தாயிரம் பேர் இருக்கின்றார்கள்.. இதோ இங்கே இவர் இருக்கின்றார் போன்ற அறிக்கை பம்மாத்துக்களைத் தவிர்க்க வேண்டும்.
அடுத்ததாக, விடுதலைப்புலிகள் மீது கிரிமினல் குற்றங்கள் எதுவும் வராத அளவிற்கு அந்த அமைப்பின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் செயற்படவேண்டும். அடாவடித்தனங்கள், சமூகவிரோதச் செயல்கள் போன்றனவற்றில் ஈடுபடும் உறுப்பினர்களை அமைப்பில் இருந்து பகிரங்கமாக விலக்கி வைக்கவேண்டும். ஜனநாயக நடைமுறையில் தமக்கு இருக்கும் ஈடுபாட்டை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தவேண்டும்.
மேற்கூறியனவற்றைச் செய்துவிட்டு, பல்வேறு நாடுகளில் உள்ள அரசியல் கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்கள் ஊடாக அந்தந்த அரசாங்கங்களுக்கு அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும்.
இதுபோன்ற பல்வேறு வியூகங்களை வகுத்து நகர்வெடுக்கின்றபொழுது விடுதலைப்புலிகள் மீது பல நாடுகள் விதித்திருக்கும் தடைகள் தானாகவே நீக்கப்படுவதற்குச் சந்தர்ப்பம் இருக்கின்றது.