நாம் இக் கட்டுரைத்தொடரில் கெடுபிடிக்காலத்துக்குப் பின்னரான காலத்து புவிசார் அரசியலில் (Post- cold war geo politics)-1990 – 2001ம் ஆண்டு காலப்பகுதிக்குள் தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புபட்ட முக்கியமான சில விடயங்களை தற்போது கவனத்திற்கு எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
நாம் எமது முதலாவது அங்கத்தில் குறிப்பிட்டவாறு மரபுசார் யத்தத்தில் ஈடுபடக்கூடிய தகைமையுடன் வளர்ச்சியடைந்திருந்த படையணிகளைக் கொண்டிருந்த தமிழர் தேசம் -
தாயகப்பகுதியில் நடைமுறை அரசினை நிர்மாணித்து – காலனித்துவ காலத்தின் பின் தமிழர்களுக்கான முதலாவது அரசாக உலகப்பந்தில் இடம்பிடிக்கும் வாய்ப்பினைக் கொண்டிருந்த தமிழீழ தேசம் -
அந்த வாய்ப்பினை ஏன் இழந்தது என்பதற்கான காரணங்களை இக் கட்டுரைத்தொடர் தேடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலை தோற்றம் பெற்றதற்கு அகப் புறக் காரணிகள் காரணமாக இருந்திருக்கின்றன.
இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் தமிழர் தேசம் தன்னகத்தே கொண்டிருந்த பலங்களும் பலவீனங்களும், போராட்ட காலத்தில் – போராட்டத்துக்காக – போராட்டத்தின் பெயரால் தமிழர் தேசம் மேற்கொண்ட நடவடிக்கைளின் சாதகமான – பாதகமான விளைவுகளும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்திருக்கின்றன.
இவை அகக் காரணிகள் என்ற வகையினுள் அடங்குபவை.
தமிழர் தேசத்திற்கு வெளியே – நாம் சந்தித்த, எதிர் கொண்ட பல்வேறு சக்திகளின் செயற்பாடுகளும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இத்தகைய தாக்கங்களும் தமிழீழ தேசத்தின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்திருக்கின்றன.
இவை புறக்காரணிகள் என்ற வகையினுள் அடங்குபவை.
இவ் அக புறக் காரணிகள் கட்டிப்பிடித்து அணைக்கும், முட்டி மோதித் தெறிக்கும் ஆடுகளமாக புவிசார் அரசியல்தளம் இருக்கிறது.இதனால்தான் இக்கட்டுரைத் தொடர் புவிசார் அரசியலை சுற்றிச் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கிறது.
தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான அகக் காரணிகளை செழுமையாக்கிச் செப்பனிட்டிருக்க வேண்டியது தமிழர் தேசத்தின் பொறுப்பாகக் கொள்ளப்படவேண்டியது.
எமது தவறுகளுக்கு நாம் வேறு எவரையும் பெறுப்பாக்க முடியாது. அவ்வாறு செய்ய முயல்வது நேர்மையற்ற ஒரு செயலாகவே இருக்க முடியும்.
இதே வேளை தமது நலன்களுக்காக எம்மைப் பலிக்கடாக்களாக பலி கொடுக்க முனைந்த, முனைகிற புறச் சக்திகளுக்கு தமிழர் தேசம் அடிபணிந்து போக முடியாது.
இத்தகைய சக்திகளை எதிர்த்து – வளைய வேண்டிய நேரத்தில் வளைந்து – பாய வேண்டிய நேரத்தில் பாய்ந்து – நாம் முன்னொரு அங்கத்தில் குறிப்பிட்டவாறு – தனது குஞ்சுகளைப் பாதுகாக்கப் போராடும் தாய்க்கோழி போலத் தமிழர் தேசம் போராடித்தான் ஆக வேண்டும்.
ஈழத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் இவ் அக புறக்காரணிகள் தமிழீழ விடுதலப் போராட்டத்தில் ஏற்படுத்திய தாக்கங்களுடன் தொடர்புபட்டவையாக இருந்திருக்கின்றன.
இதனால்தான் இக் கட்டுரைத்தொடர் ஈழம் தோல்வி கண்டதா அல்லது தோற்கடிக்கப்பட்டதா என்ற தலைப்பினைத் தாங்கி நிற்கிறது.
ஈழம் அகக்காரணிகளால் தோல்வி கண்டதா அல்லது புறக்காரணிகளால் தோற்கடிக்கப்பட்டதா என்ற கேள்வியினை இக் கட்டுரைத் தொடர் எழுப்பி நிற்கிறது.
உண்மையில் இவ் அகப் புறக்காரணிகள் தனித்தனியே பிரித்துப் பார்க்கப்பட முடியாதவை. இப் புரிதலும் இக் கட்டுரைத் தொடருக்கு உண்டு.
சூழலில் வாழும் உயிரியினைப் போலத்தான் உலகச் சூழலுக்குள் போராட்டங்களும் வாழ வேண்டியுள்ளன. இதனால் போராட்டத்தின் அகப்புறக் காரணங்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.
சூழலில் போராடும் போது ஒரு உயிரி எடுக்கும் முடிவுகள் பல தடவைகளில் அதன் உயிர் வாழ்தலுடன் மிகவும் தொடர்புபட்டிருக்கும்.
போராட்டங்களை முன்னெடுக்கும் தேசங்கள் எடுக்கும் முடிவுகளும் பல தடவைகளில் போராட்டங்களின் உயிர்வாழ்தலுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருக்கும்.
உயிரிகளில் மனிதன் ஆறறிவு படைத்தவன் என்றும் அதனால் ஏனைய உயிரிகளை விட மேம்பாடடைந்திருக்கிறான் என்றும் நாம் பல தடவைகளில் பெருமிதம் கொள்வதுண்டு.
ஆனால் இந்த மனிதகுலத்துக்குள்தான் உயிர்வாழ்வதற்காக வலியோரை எதிர்த்து வலிமை குறைந்தோர் போராட வேண்டியுள்ளது. சிறிய தேசங்களும் வலிமை மிக்க தேசங்களை எதிர்த்துப் போராட்டங்களை நடாத்த வேண்டியுள்ளது.
இக் கட்டுரைத்தொடர் குறித்த குறிப்புக்களை நிறுத்தி தொடருக்குள் இவ்விடத்திலிருந்து நுழைவோம்.
1991 ஆம் ஆண்டில் இடம் பெற்ற ராஜீவ் கொலைச் சம்பவம் ஏன் இடம் பெற்றது என்பது குறித்து நோக்கியிருந்தோம்.
அப்போது யாழ்ப்பாணம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.
ராஜீவின் கொலைக்கு சற்ற முந்திய காலத்தும் பிந்திய காலத்துமாக நிகழ்வுகள் சிலவற்றை இவ்வங்கத்தில் நோக்குவோம்.
இந்திய இராணுவம் 1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியேறிய பின்னர் விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தைத் தமது முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்திருந்தனர். ஜனாதிபதி பிரேமதாசாவுடன் அப்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
1990 ஆம் ஆண்டு யூன் மாதம் யுத்தம் மீண்டும் ஆரம்பமாகிப் பேச்சுவார்த்தைகள் முறிவடைகின்றன. இரண்டாவது தமிழீழப் போர் ஆரம்பமாகிறது.
சிறிலங்கா அரசுடன் விடுதலைப்புலிகள் கொண்டிருந்த தந்திரோபாய உறவுக்கான தேவை இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்துடன் அற்றுப்போகிறது.
தமிழீழம் என்பது பேச்சுவார்த்தைகளின் மூலம் பெறக்கூடியது அல்ல என்று விடுதலைப்புலிகள் கருதியமையால் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட முறுகல் நிலைமையுடன் போரின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொள்கின்றனர்.
சிறிலங்கா அரசும் தான் விரும்பும் வகையிலான ஒரு தீர்வுத்திட்டப் பொதிக்குள் விடுதலைப்புலிகளை மூடிக்கட்ட முடியாது என்பதை உணர்ந்திருந்தமையால் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தைத் தீவிரப்படுத்துகிறது.
சிறிலங்கா அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த 1989 -1990 காலத்தில் கொழும்பிலும் தெற்குப் பகுதிகளிலும் விடுதலைப்புலிகளுக்கு மரியாதையும் செல்வாக்கும் இருந்தது.
இக் காலப் பகுதியைப் பாவித்து எதிர்கால நடவடிக்கைகளுக்குத் தேவையான விதைகளை விடுதலைப்புலிகள் இயக்கம் தெற்கில் தூவி விட்டிருந்தது. இவ் விதைகள் இயல்பாக வளர்ச்சியடைந்து வந்து கொண்டிருந்தன
1990 – 1994 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற இரண்டாம் கட்ட விடுதலைப் போராட்டத்தில் தமிழரின் தாயகப்பிரதேசங்களுக்கு வெளியேயான – குறிப்பாக கொழும்பிலும், ஏனைய தெற்குப் பகுதிகளிலும் மேற்கொள்ளக்கூடிய இராணுவ நடவடிக்கைகளில் விடுதலைப்புலிகள் இயக்கம் கூடிய கவனம் செலுத்துகிறது.
இதற்கு பேச்சவார்த்தைக் காலத்தில் விதைத்திருந்த, விதைத்து வளர்ந்து கொண்டிருந்த விதைகள் பெரிதும் துணைபுரிபவையாய் அமைகின்றன.
இக் காலகட்டத்து இராணுவ நடவடிக்கைகளில் அரசியல் கொலைகள் முக்கிய இடம் பிடிக்கின்றன.
1991 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் திகதி துணை இராணுவ மந்திரியாக இருந்த ரஞ்சன் விஜேரத்னா Remote Control மூலம் இயக்கப்பட்ட ஓரு கார்க்குண்டு வெடிப்பின் மூலம் கொல்லப்படுகிறார்.
விடுதலைப்புலிகளுக்க எதிரான நேரடி, மறைமுக இராணுவ நடவடிக்கைகளை இவர் தீவிரமாக மேற்கொண்டிருந்த வேளையிலேயே இச் சம்பவம் நடைபெறுகிறது.
1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற ராஜீவ் காந்தி கொலைச்சம்பவம் குறித்து கடந்த அங்கத்தில் பார்த்திருந்தோம்.
ராஜீவ் சம்பவத்தின்பின் விடுதலைப்புலிகளின் நடவடிக்கை தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படுகிறது.
இது மட்டுமன்றி இந்தியா தனது இராஜதந்திர வியூகத்தினால் சர்வதேச அரங்கிலும் விடுதலைப்புலிகள் மீதான பிடியினை இறுக்கத் தொடங்குகிறது.
இந்தியாவின் இச் சர்வதேச வியூகத்தின் முதற்பலியாக விடுதலைப்புலிகளின் முன்னாள் யாழ் மாவட்டத் தளபதியும் பின்னர் சர்வதேச கிளைகளின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்தவருமான கிட்டு அமைந்து விடுகிறார்.
கிட்டு பிரேமதாசாவுடன் பேச்சுவார்த்தை நடாத்திய காலத்தில் – 1989 ஆம் ஆண்டு வைத்திய சிகிச்சைக்கென லண்டன் வந்தடைந்து விடுதலைப்புலிகளின் வெளிநாட்டுக்கிளைக் கட்டமைப்பை பொறுப்பெடுத்துக் கொண்டவர்.
இவர் லண்டனுக்கு வரும்போது வெளிநாட்டுக் கிளைகளின் பொறுப்பு கேபியின் கைகளிலேயே இருந்தது. கிட்டு வந்ததும் கிட்டுவும் கேபியும் தமது வேலைகளைப் பங்கிட்டுக் கொள்கின்றனர்.
வெளிநாட்டுக் கிளைகளின் நிர்வாகம், அரசியல் வேலைகள், நிதிசேகரிப்பு ஆகியன கிட்டுவின் பொறுப்பில் வருகின்றன.
சேகரிக்ப்பட்ட நிதியினைப் பொறுப்பெடுத்து விநியோகப் பணிகளை ஒழுங்கமைத்து மேற்கொள்வது கேபியின் பொறுப்பில் வருகின்றன.
கிட்டுவின் வருகை விடுதலைப்புலிகளின் சர்வதேசக் கிளைகள் வளர்ச்சியடைவதற்கு உதவுகிறது. லண்டனில் இவர் இருந்த காலத்தில் பலரையும் விடுதலைப் போராட்டத்துடன் ஒருங்கிணைப்பதற்கு பெரிதும் முயற்சி செய்கிறார்.
விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை மட்டுமன்றி இவரது காலத்தில் யாழ்ப்பாணத்தில் தடைசெய்யப்பட்ட இயக்கங்களில் இருந்து தப்பி வந்திருந்த முன்னைய போராளிகளுடனும் கிட்டு தொடர்புகளை ஏற்படுத்தி போராட்டத்தின் பால் அவர்களை இணைக்க முயல்கிறார்.
மக்களை போராட்டத்துடன் இணைத்தல் என்பது படிமுறைகளைக் கொண்டது. எதிர்ப்பாளர்களை எதிர்ப்பற்றவர்களாக்குவது – அக்கறையற்றிருப்பவர்களை அக்கறை கொள்ளச் செய்வது – ஆதரவாளர்களை செயற்பாட்டாளர்களாக்குவது – ஆர்வமுள்ள செயற்பாட்டாளர்களை முழுநேரப் பணியார்களாக்குவது – என பல படிமுறைகளைக் கொண்டவகையில் போராட்டத்துடன் மக்களை இணைக்கும் பணி ஒழுங்கமைக்கப்பட வேண்டும் எனக் கிட்டு சிந்திக்கிறார்.
கிட்டுவின் அணுகுமுறை லண்டனில் பலரை ஆகர்சித்துக் கொள்கிறது. முன்னர் கிட்டு யாழ்ப்பாணத் தளபதியாக இருந்தபோது கிட்டுவைத் தெரிந்தவர்கள், கிட்டர் நிறையவே மாறி விட்டார் எனப் பேசிக் கொள்கின்றனர்.
கிட்டுவின் அணுகுமுறையாலும் அறிவுக்கூர்மையாலும் கவரப்பட்ட சட்ட அறிஞர் நடேசன் சத்தியேந்திரா விடுதலைப்புலிகளின் சர்வதேச செயலகத்தின் சட்ட ஆலோசகராக விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் இணைந்து பணிபுரிய முன்வருகிறார்.
இவ்வாறாக விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் சர்வதேச மட்டத்தில் வளர்ச்சியடையத் தொடங்குகின்றன.
1990 ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் யுத்தம் மூண்ட பின்னரும், கிட்டு மீண்டும் யுத்த நிறுத்தம், பேச்சுவார்த்தைகள் வருவதற்கு உதவுவார் என்பதானால் கிட்டுவின் இருப்பை லண்டன் சகித்துக் கொள்கிறது.
1991 ஆம் ஆண்டு மே மாதம் ராஜீவ் கொல்லப்பட்ட பின்னர் லண்டனில் கிட்டுவின் மீது அழுத்தம் அதிகரிக்கிறது. கிட்டு லண்டனை விட்டு தலைமைறவாக வெளியேறுகிறார்.
பின்னர் சிறிலங்கா அரசுடன் பேச்சுவார்த்தையினை மீண்டும் ஆரம்பிக்க உதவும் தனது முயற்சிக்கு கிட்டு உதவுவார் என்ற எண்ணத்தோடு சுவிற்சலாந்து அவரை 9 மாதங்கள் அங்கு தங்குவதற்கு அனுமதிக்கிறது.
குறிப்பிட்ட காலம் முடிய கிட்டு மீண்டும் தலைமறைவாக நாடு நாடாக அலையும் நிலை ஏற்படுகிறது. ஒரு காலை இழந்தவராக மிகவும் சிரமத்தோடு கிட்டு அலைந்துழல்கிறார்.
தாயகத்தின் மீது பற்றும் பாசமும் தாயகத்தை விட்டு வெளியேறிய பின்னரே கூடுதலாகத் தெரிகிறது எனக் கூறிக்கொள்கிறார்.
வெளிநாடுகளில் விடுதலைக்காகப் பணியாற்றிய காலங்களில் தமக்கு ஏற்பட்ட மனஉணர்வுகளை தனது மனைவிக்கும் பிரபாகரனுக்கும் போராளிகளுக்கும் கடிதங்களாக வடித்துக் கொள்கின்றார்.
இவர் தனது மனைவிக்கு எழுதிய கடிதங்கள் பின்னர் புத்தகமாக வெளிவருகிறது. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் அரியதொரு ஆவணம் அது.
இவற்றை விட தமது மன உணர்வுகளை ஓவியமாகவும் அவர் வரைந்து கொள்கிறார்.
சிறிலங்காவுடனும் இந்தியாவுடனும் விடுதலைப்புலிகளுக்குப் பகை உறவு ஏற்பட்ட பின்னர் கிட்டுவுக்காக எந்த நாடும் கதவு திறக்கவில்லை.
தலைமறைவாக இருந்து அரசியற்பணிகளை முன்னெடுப்பது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு கிட்டு வருகிறார். இதனால் மீண்டும் தாயகம் திரும்புவது என்ற முடிவினை எடுக்கிறார்.
அதனைப் பிரபாகரனுக்கும் தெரியப்படுத்துகிறார். பிரபாகரனும் கிட்டுவின் முடிவுக்குச் சம்மதிக்கிறார். கிட்டுவினை தாயகம் அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பிரபாகரன் கேபியைக் கேட்டுக் கொள்கிறார்.
ஜரோப்பாவில் தனது தலைமறைவு வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மீண்டும் தலைமறைவாகத் தென் கிழக்காசிய நாடொன்றுக்குச் செல்கிறார் கிட்டு.
அங்கு கேபியைச் சந்திக்கிறார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் எதிர்காலம் தொடர்பாகப் பல்வேறு விடயங்களை இவர்கள் பேசிக் கொள்கின்றனர்.
கேபி விடுதலைப்புலிகளின் விநியோகக் கப்பல் ஒன்றில் கிட்டுவைத் தாயகம் அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளை செய்கிறார். கிட்டுவுக்குத் துணையாக குட்டிசிறியும் சில போராளிகளும் தாயகத்தில் இருந்து வந்து சேர்கின்றனர்.
கிட்டு பயணம் செய்யும் கப்பல் பயணத்திற்குத் தயாராகிறது. இக் கப்பலில் கிட்டு பயணம் செய்கிறார் என்பதனை இரகசியமாக வைத்திருப்பதற்காக கப்பலின் தொடர்பாடல் முறையில் மாற்றம் செய்கிறார் கேபி.
உரையாடலை ஒட்டுக் கேட்கும் வாய்ப்பினைக் குறைப்பதற்காக கப்பலில் உள்ள வழமையான தொடர்பாடல் கருவிகளைப் பயன்படுத்துக்கூடாது என கப்பல் கப்டனுக்கும் பணியாளருக்கும் கேபி உத்தரவு பிறப்பிக்கிறார்.
தொடர்பாடலுக்காக அப்போது புதிதாய் வந்திருந்த சற்றலைட் தொலைத்தொடர்பு உபகரணம் ஒன்று பெறப்பட்டு அதனை இயக்கும் விதம் குறித்துப் பயிற்சியும் கப்பல் தொழில்நுட்பவியலாளருக்கு வழங்கப்படுகிறது.
கப்பலில் உள்ளோர் எவரும் கிட்டு கப்பலில் பயணிப்பதனை தொலைத் தொடர்பு ஊடகத்தினூடாகக் கரையில் இருப்பவர்களோடு பேசக்கூடாது எனவும் கேபி பணித்துக் கொள்கிறார்.
கப்பல் தனது பயணத்தை ஆரம்பித்து விட்டது.
கப்பல் பயணிக்கும் போது சர்வதேசக் கடற்பரப்பில் இந்தியப்படையினர் கப்பலை சந்தேகத்தில் பின் தொடர்கின்றனர். இத்தகைய பின் தொடர்கைகள் இடைக்கிடையே நடைபெறுவதுதான்.
இருந்தும் கிட்டு கப்பலில் இருப்பதால் இது பெரும் பதட்டத்தைக் கப்பல் பணியாளர்கள் மத்தியில் தோற்றுவித்து விடுகிறது. பதட்டத்தில் புதிய தொழில் நுட்பக் கருவியை அவர்களால் உரிய முறையில் இயக்க முடியாமல் போய் விடுகிறது.
கப்பலில் உள்ள வழமையான கருவியினைப் பயன்படுத்தி அவர்கள் தொடர்பாடலை மேற்கொள்கின்றனர். நிலைமை சிக்கல் அடைந்தமையால் கிட்டுவும் கட்டளைப் பொறுப்பைத் தனது கையில் எடுத்துக் கொள்கிறார். இந்தியப்படையினர் உரையாடலை ஒட்டுக் கேட்டு கிட்டு கப்பலில் இருப்பதனை உறுதி செய்து கொள்கின்றனர்.
இதற்கிடையில் இந்தியக் கடற்படையின் பின்தொடர்கையினை நிறுத்துவதற்கு இந்திய அரசியல் மட்டத்தில் சில முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்தால் கோபடைமந்திருந்த இந்திய அரச தரப்பிடமிருந்து சாதகமான பதிலேதும் இல்லை.
கப்பலைச் சரணடையுமாறு இந்திய கடற்படையினர் தொடர்ந்து கூறிக் கொண்டு பின் தொடர்ந்து கொண்டிருந்தனர். இரண்டு நாட்களாக இப் பின் தொடர்வு நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
ஒரு கட்டத்தில் கிட்டுவே நேரடியாக இந்திய கடற்படையதிகாரிகளுடன் பேசுகிறார். சரணடைய முடியாது என்பதனை எடுத்துச் சொல்கிறார். தாம் விடுதலைப் போராளிகள் என்பதனையும் இந்தியாவுக்கு எதிரானவர்கள் இல்லை என்பதனையும் எடுத்துக் கூறுகிறார். தமது பயணத்தைத் தொடர அனுமதிக்கும்படியும் கோருகிறார்.
இந்தியக் கப்பற்படை தமது கப்பலை நெருங்க முனைந்தால் கப்பலையும் தகர்த்து தாமும் தற்கொலை செய்து கொள்வோம் என உறுதியாகக் கூறுகிறார்.
இந்தியப்படையினர் கேட்பதாக இல்லை. தொடர்ந்து கப்பலை நெருங்கி வந்து கொண்டிருந்தனர்.
கிட்டு தனது இறுதி எச்சரிக்கையினையும் விடுத்து விடுகிறார். இந்தியப்படையினர் பின்வாங்குவதாக இல்லை.
கப்பல் பணியாளர்களை கப்பலில் இருந்து வெளியேறுவதற்கான உத்தரவுகளைக் கொடுத்து விட்டு கப்பலைத் தகர்ப்பதற்கும் தாம் குப்பிகளைக் கடித்துக் கொள்வதற்கு கிட்டுவும் குட்டிசிறியும் ஏனைய போரளிகளும் முடிவு செய்து கொள்கின்றனர்.
இந்தியக் கப்பல் மேலும் நெருங்குகிறது. கப்பல் பணியாளர்கள் படகு மூலம் வெளியேற்றப்படுகின்றனர்.
கப்பலைத் தகர்ப்பதற்கான உத்தரவினைக் கிட்டு பிறப்பிக்கிறார். கப்பல் தகர்கிறது.
இப்படியாகத்தான் கிட்டுவை 16.01.1993 அன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் இழந்தது. கிட்டு தாயகம் போய்ச் சேர்ந்திருந்தால் அது தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு பலவிதங்களில் பலம் சேர்த்திருக்கும்.
களத்திலும் புலத்திலும் நேரடி அனுபவம் உள்ள – பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் – வலது கையாக இருக்கக்கூடிய ஒரு தளபதி மீண்டும் போய்ச் சேர்ந்திருப்பாராயின் விடுதலைப் புலிகளின் சர்வதேச செயற்பாடுகள் அவரது பொறுப்பிலேயே இருந்திருக்கும்.
அனுபவத் தெறிப்புடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சர்வதேச உறவுப்பரப்பினை விரித்திருந்திருக்க முடியும்.
ஆனால், அந்தக் கொடுப்பினை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு கிடைக்கவில்லை.
தொடரும்…
- நன்றி: பொங்குதமிழ்
http://www.nerudal.com/
Thursday, April 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment