Friday, April 30, 2010

பிரபாகரன் தாயாருக்கு சிகிச்சை அளிக்க தயார்: தமிழக அரசு

பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்தார். அவர் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார்.
இதை எதிர்த்து வழக்கறிஞர் கருப்பன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நலன் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கடந்த 16ஆம் தேதி மலேசியாவில் இருந்து சென்னை வந்த பார்வதி அம்மாளை குடியுரிமை அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

விசா உள்ளிட்ட உரிய அனுமதியுடன் வந்த பார்வதி அம்மாளை, இந்தியாவுக்குள் அனுமதிக்காகதது சர்வதேச மனித உரிமை மீறல். இதனால் பார்வதி அம்மாளை தனி விமானம் மூலம் மீண்டும் சென்னை அழைத்து வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார். மேலும் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் மத்திய அரசே ஏற்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் தர்மாராவ், கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு வக்கீல் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன் ஆஜராகி வாதாடுகையில்,

பிரபாகரனின் தந்தை வேலுபிள்ளை மற்றும் தாய் பார்வதி அம்மாள் ஆகியோரை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு கடந்த 2003ஆம் ஆண்டு தமிழக அரசு கடிதம் எழுதியது. அதன் அடிப்படையிலேயே பார்வதி அம்மாள் அனுமதிக்கப்படவில்லை.

தமிழக அரசு தனது கடிதத்தினை திரும்ப பெறும் வரையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஒன்றும் செய்ய இயலாது என்றார்.

அப்போது தமிழக அரசு வக்கீல் ராஜா கலிபுல்லா கூறியதாவது:

பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளிடம் இருந்து அரசுக்கு இதுவரை எந்த கோரிக்கையும் வரவில்லை. அவர் மனு கொடுத்தால் அதை மத்திய அரசுக்கு அனுப்பி அனுமதி கேட்கப்படும். அதன் அடிப்படையில் சிகிச்சைக்கு அனுமதிக்க தயார் என்றார்.

மத்திய அரசு வக்கீல் ரவீந்திரன் கூறுகையில், தமிழக அரசு கேட்டுக்கொண்டால் இது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்க தயாராக உள்ளது என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கூறுகையில், பார்வதியம்மாளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக 2 வாரத்துக்குள் மனு கொடுக்கப்படும். அந்த மனுவை மத்திய மாநில அரசுகள் பரிசீலித்து 4 வாரத்துக்குள் முடிவை தெரிவிக்க வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment