Friday, February 26, 2010

யாழ்ப்பாணம் எப்படியிருக்கிறது?

இப்பொழுது யாழ்ப்பாணம் எப்பிடியிருக்கு?’ என்று கேட்டார் புலத்திலிருக்கும் நண்பர் ஒருவர். இதற்கு உடனடியாக என்ன பதிலைச் சொல்ல முடியும்?

யாழ்ப்பாணத்திற்கு ஆயிரக்கணக்காக சுற்றுலாப் பயணிகளாக வருகின்ற சிங்களவர்களைப் பற்றிச் சொல்வதா?

அல்லது யாழ்ப்பாணத்தில் அதிகரித்திருக்கும் டெங்குக் காய்ச்சலைப் பற்றிச் சொல்லவா?


அல்லது யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெருகிக் கொண்டிருக்கும் வங்கிகளைப் பற்றியும் பெரும் வணிக நிறுவனங்களைப் பற்றியும் சொல்வதா?


அல்லது வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கும் அரைவாசிப் பேரைப் பற்றியோ அல்லது ‘இந்தத் தேர்தல் வந்து இன்னும் ஒரு ஆறு வருசம் எங்களை அலைக்கப் போகிறது’ என்று சொல்லிவிட்டு ‘என்னதான் நடந்தாலும் இந்தத் தமிழ்க் கட்சிகளைத் திருத்தவே முடியாது’ எனச் சலிப்போடு ஒதுங்கியிருக்கும் சனங்களைப் பற்றிச் சொல்வதா?

இல்லையென்றால், தங்கள் சொந்த ஊர்களுக்கு எப்போது போகலாம் என்ற எதிர்பார்ப்போடு போருக்குப் பின்னும் அகதிகளாகவே இருக்கிற ஆட்களைப் பற்றிச் சொல்வதா? இவர்களில் பாதிப்பேர் உயர் பாதுகாப்பு வலயம் என்ற வடமராட்சி கிழக்கு மற்றும் வலிவடக்குப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். மிகுதிப் பேர், வன்னியைச் சேர்ந்தவர்கள்.

அதுவும் இல்லையென்றால், யாரும் வரலாம் போகலாம், எதுவும் நடக்கலாம் விடலாம் என்ற மாதிரி தோட்டங்களுக்குள் நிற்கும் விவசாயிகளைப் பற்றிச் சொல்லவா? கோவில், குளம், விரதம், நோன்பு என்றிருக்கிறவர்களைப் பற்றிச் சொல்லவா? அல்லது கடல் வலயச் சட்டத்தை எப்போது முழுதாக நீக்குவார்கள்? எப்போது நிம்மதியாகக் கடலுக்குப் போகலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மீனவர்களைப் பற்றிச் சொல்லவா?

அல்லது தெருக்கள், சந்திகள் என்று எங்கும் கடை விரித்திருக்கும் நூற்றுக் கணக்கான சிங்கள வியாபாரிகளைப் பற்றிச் சொல்லவா?

அதுவுமில்லை என்றால், யாழ்ப்பாணத்தில் இருந்து வருகின்ற பத்திரிகைகளில் சில செய்கின்ற பிரச்சாரப் போரைப் பற்றிச் சொல்வதா?

போர் முடிந்த பிறகும் தெருவழியே எதற்காகவோ இன்னும் துப்பாக்கிகளோடு போருக்கான நிலையில் காத்திருக்கின்ற படையினரைப் பற்றிச் சொல்லவா?

இதில் எதைப்பற்றிச் சொல்வது? அல்லது எதை விடுவது?


இது தகவல் யுகம். தமிழர்கள் எப்பொழுதும் உலகின் நவீனத்துவங்களோடு தங்களை அறிமுகமாக்கி வைத்திருப்பவர்கள் என்று சொல்லப்படுவதுண்டு. அதிலும் ஈழத்தமிழர்கள் இதில் இன்னும் சில படிகளில் முன்னே நிற்பவர்கள். எனவே அவர்கள் எல்லாத் தகவல்களையும் உடனுக்குடன் அறிந்திருப்பாரகள். ‘அமெரிக்காவின் செய்மதிகளை விடவும் வேகமாகவும் தகவல்களைச் சேகரிப்பதில் வல்லவர்கள் ஈழத்தமிழர்கள்’ என்று சொல்வார் ஒரு நண்பர்.


ஆகவே, ‘ஏறக்குறைய யாழ்ப்பாணத்தின் நிலவரங்கள் எல்லாவற்றைப் பற்றியும் ஓரளவுக்கு நீங்கள் அறிந்திருப்பீர்கள். எனவே இதில் என்ன புதிதாகச் சொல்ல இருக்கிறது?’ என்றேன்.


என்னதான் எதைப் பற்றி அறிந்திருந்தாலும் ஊர் நிலவரங்களைப் பற்றிப் புதிதாகவோ, வேறு கோணங்களிலோ அறிவதில் யாருக்குத்தான் ஆவலிருக்காது. நீங்கள் பார்ப்பதையும் அறிவதையும் சொல்லுங்கள் என்றார் அவர்.


யாழ்ப்பாணத்தில் இப்போது வட்டிக்கடைகள் வரவரக் கூடிக்கொண்டேயிருக்கிறது. (அதாவது வங்கிகளை இங்கே சிலர் இப்போது வட்டிக்கடைகள் என்றே சொல்கிறார்கள்). குடாநாட்டில் இப்பொழுது பன்னிரண்டு வகையான வங்கிகள் அல்லது வட்டிக்கடைகள் இயங்குகின்றன.

இந்த வங்கிகளை அறிமுகப்படுத்தும் திருவிழா இருக்கிறதே அதுதான் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியது. யூனியன் வங்கி பென்னாம் பெரிய வெங்காயத்தை வைத்துக் காரியம் பார்க்கிறது. யாழ்ப்பாணத்தின் அடையாளங்களில் வெங்காயம் ஒன்று. யாழ்ப்பாணத்து விவசாயத்தில் வெங்காயமும் புகையிலையும் முக்கியமானவை. ஆகவே அதை வைத்தே சனங்களோடு நெருக்கமாக முயற்சிக்கின்றது யூனியன் வங்கி. அந்த வங்கியின் விளம்பரங்களில் இந்த வெங்காயம் பெரிதாகக் காட்டப்படுகிறது.

இதைப்போல, பனை மரத்தை காட்சியாக்கி இன்னொரு வங்கி. நல்லூர்க் கோவிலையும் தமிழ்ப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் படியான உடைகள், ஆபரணங்களை அணிந்தவாறிருக்கும் ஆட்களைக் காட்சியாக்கி மற்ற வங்கிகள் என தமிழர்களுக்காக, யாழ்ப்பாணத்து மக்களுக்காகவே இந்த வங்கிகள் உழைக்கப் போவதாகக் கூறித் திறக்கப்படுகின்றன.


யாழ்ப்பாண மக்கள் கடந்த இருபது இருபத்தைந்து வருடங்களும் படாத பாடெல்லாம் பட்டவர்கள். சிலகாலங்களில், உழைப்புக்கே வழியற்றிருந்தவர்கள். ஊரடங்குச் சட்டம், கடல் வலயச் சட்டம், அவசரகாலச் சட்டம் போன்றவற்றால் அவர்கள் படாத துன்பங்களையெல்லாம் அனுபவித்தவர்கள். சுற்றிவளைப்பு, படுகொலைகள் போன்றவற்றால் கலங்கியவர்கள்.


ஒரு கிலோ அரிசி வாங்குவதற்காக, ஒரு கிலோ சீனியைப் பெறுவதற்காக படாத சிரமங்களையெல்லாம் பட்டவர்கள். அதையும் விடக் காசுக்காகவே கஸ்ரப்பட்டவர்கள். அதாவது, திரவப்பணத்துக்காக எவ்வளவோ சிரமங்களைச் சந்தித்தவர்கள். உழைக்க வழியற்றிருந்தவர்கள்.



‘இதெல்லாம் முடிந்து போன கதைகள். அது போர்க்காலம். அப்போது அப்படித்தான் இருக்கும். இப்போது புதிய காலம். புதிய சூழல் பிறந்திருக்கு. பழையதை எல்லாம் இன்னும் சொல்லிக்கொண்டு இன்னும் பழைய மாதிரியே இருக்கலாமா?’ என்று இதையிட்டுச் சிலர் கேட்கக் கூடும்.



இங்கே பிரச்சினை, பழையதையெல்லாம் நினைக்க வைக்கும்படி ஏன் நிலைமை இருக்கிறது என்பதுதான். தமிழர்கள் மறக்க வேண்டியதை எல்லாம் இன்னும் நினைத்துக் கொண்டேயிருக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. இது ஒரு உளவியல் சார்ந்த பிரச்சினை. மட்டுமல்ல, இது நடைமுறை சார்ந்த பிரச்சினையும் கூட.



கடந்த காலக் கசப்புகளை மறப்பதற்கு ஏற்றமாதிரி மாற்றங்கள் நடக்கவேணும். அந்த மாற்றங்கள் கடந்த காலக் கசப்புகளை நீக்கி, புதிய நம்பிக்கைகளை உருவாக்க வேணும். இது அரசியலிலும் சரி, வேறு எந்த விசயங்களிலும் சரி, நடைமுறையானால்தான் எதையும் சந்தேகிக்கிற, குற்றம்சாட்டுகிற மனப்பாங்கு விட்டுப் போகும். இதற்காக முழுக் காரியங்களையும் ஒரு நன்முகத்தோடு அரசாங்கம் செய்து நிரூபிக்க வேணும்.



போர் முடிந்த பிறகு பாதை திறக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டிருக்கிறது. சுற்றி வளைப்புகள், கொலைகள் எல்லாம் இப்போதில்லை. பொருட் தட்டுப்பாடு நீங்கியிருக்கிறது. ஆனால், இவற்றைத் தவிர ஏனைய எதிலும் எந்த முன்னேற்றமும் நடக்கவில்லை.



இந்தச் சந்தர்ப்பத்தில் வங்கிகளைத் திறக்க அரசாங்கமும் வங்கித் தலைமைப் பீடங்களும் அவசரங் காட்டுகின்றன. ஆனால், இந்த அவசரத்தை தமிழ் மக்களின் மீள் குடியேற்றம், தமிழ்ப் பிரதேசங்களின் புனரமைப்பு, அபிவிருத்தி, உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல், மீன் பிடிக்கான தடைகள், கட்டுப்பாடுகளை நீக்குதல் போன்ற அடிப்படையான விசயங்களில் காட்டவில்லை.



யாழ்ப்பாணத்தவர்கள் என்னதான் கஸ்ரங்கள், பிரச்சினைகள் இருந்தாலும் சேமிப்புப் பழக்கமுடையவர்கள். அதனால், இந்த வழக்கத்தைப் பயன்படுத்தி அவர்களுடைய காசை குறைந்த வட்டியோடு தென்பகுதிக்கு கொண்டு செல்கின்றன இந்த வங்கிகள். இது தெற்கின் அபிவிருத்திக்கு பெரும் வாய்ப்பைக் கொடுக்கிறது. தெற்கே பெரும் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது அரசாங்கம். அதற்கு யாழ்ப்பாணத்துக் காசு தாராளமாகப் பயன்படுகிறது. யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகைப் பணம் புலத்திலிருந்து வருகிறது.



இந்தப் பணம் அதன் நடைமுறை அர்த்தத்தில் வடக்கை விடவும் தெற்குக்கே அதிக பயனைக் கொடுக்கிறது என்கிறார் யாழ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் ஒருவர். தென்னிலங்கை அதிக சிரமமில்லாமல் லாபத்தை அனுபவிக்கிறது என்கிறார் மேலும் அவர். உண்மைதான், புலத்தில் இருக்கும் தமிழர்கள் பனியிலும் குளிரிலும் தங்கள் உடலை வைத்து உழைத்து இங்கே காசை அனுப்பும் போது அதை சுகமாக தெற்கு கொண்டு போகிறது. அதற்குக் குறைந்த வீத வட்டியை மட்டும் கொடுக்கிறது.



வடக்கே பெரிய முதலீடுகளைச் செய்வதற்கு இன்னும் யாரும் தயாராகவில்லை. பொதுவாகவே முதலீடுகளைச் செய்யும் வழக்கம் ஈழத்தமிழர்களிடம் குறைவு. இப்போது புலத்திலிருக்கும் தமிழர்களிடம் முதலீட்டுப் பழக்கம் கொஞ்சம் அறிமுகமாயிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் முதலீட்டுப் பழக்கமும் அதற்கான சூழலும் இன்னும் சரியாக உருவாகவில்லை. இதை ஏற்படுத்த வேண்டியது ஒன்று அரசைச் சேர்ந்தது. அடுத்தது புலத்திலிருக்கும் மக்களுக்குரியது.



முதலீட்டுக்குரிய அளவில் பெருந்தொகைப் பணத்தை யாழ்ப்பாணத்தில் எவரும் கொண்டிருக்கவில்லை. அவர்களுக்கு புலம்பெயர்ந்திருக்கும் மக்கள்தான் உதவவேண்டும். அப்படி முதலீட்டுப் பழக்கம் அறிமுகமாகும்போது அதைத் தொடர்ந்து சிறு முதலீடுகள் யாழ்ப்பாண மக்களால் நம்பிக்கையோடு ஆரம்பிக்கப்படும்.



யாழ்ப்பாணத்தில் வேலையில்லாப் பிரச்சினை பெரியது. ஆயிரக் கணக்கானவர்கள் வேலையில்லாமல் சீரழிகிறார்கள், சிரமப்படுகிறார்கள். புதிய முதலீடுகளின் மூலம் இந்த மக்களுக்கான தொழில் வாய்ப்புகளை வழங்கலாம். இதுகூட ஒரு தேசியப் பணிதான். அதேவேளை இதன்மூலம் பிற சக்திகள் யாழ்ப்பாணத்தில் ஆதிக்கம் செலுத்துவதைக் கட்டுப்படுத்தவும் முடியும்.



இப்போது யாழ்ப்பாணத்தில் பல காணிகள் சிங்கள முதலாளிகளினாலும் இந்திய முதலீட்டாளர்களாலும் கொள்வனவு செய்யப்பட்டு வருகின்றன. அவர்கள் யாழ்ப்பாணத்தின் பண்பாட்டுச் சூழலைப் பற்றியோ, புவியியல் சூழலைப் பற்றியோ கவலைப்படாதவர்கள். அதாவது இவை பாதிக்கப்படுவதைப் பற்றிய அக்கறையில்லாதவர்கள்.



இவ்வளவு காலமும் பொருளாதாரத் தடைகளாலும் அரசியல் நெருக்குவாரங்களாலும் பாதிக்கப்பட்டிருந்த இந்த மக்கள் இன்னும் பாதிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். அத்துடன் அவர்கள் வெளிப்படையாகவே சுரண்டப்பட்டுக் கொண்டுமிருக்கிறார்கள்.



இதேவேளை இந்த மக்களுக்கு கடனை வழங்கியும் இந்த வங்கிகள் உழைக்கின்றன. அதாவது யாழ்ப்பாண மக்களிடம் தாராளமாக இந்த வங்கிகள் சுரண்டுகின்றன. யாழ்ப்பாண மக்களில் எழுபத்தி இரண்டு வீதமானவர்கள் கடனைப் பெறுகிறார்கள் என்று ஒரு வங்கி அதிகாரி தெரிவிக்கிறார். இவர்கள் முதலீட்டுக்கான கடனைப் பெறவில்லை என்பதுதான் ஆகப் பெரிய சோகம் என்கிறார் இந்த அதிகாரி. இவர் ஒரு தமிழர் என்பதால் இப்படிக் கவலைப்படுகிறார்.



ஆகவே ஒரு பக்கத்தில் சிறு சேமிப்பாளர்களின் பணத்தை வைத்து தெற்குப் பயனடைகிறது. அத்துடன் புலம் பெயர் மக்களின் உழைப்பும் சுரண்டப்படுகிறது. மறுநிலையில், கடன் கொடுத்து யாழ்ப்பாண மக்களின் உழைப்புச் சுரண்டப்படுகிறது. இந்த வங்கிகளின் பங்காளர்களாக தெற்கின் பெரும் கைகள் இருக்கின்றன. அத்துடன் அரசாங்க வங்கிகளும் இதில் இணைந்திருக்கின்றன.



அபிவிருத்தி நடவடிக்கைகளைச் செய்வதில் காட்டுகின்ற அக்கறையை விடவும் வணிக மையங்களைத் திறப்பதிலும் வங்கிகளை இயங்க வைப்பதிலும் அரசாங்கம் காட்டுகின்ற ஆர்வம் மிகப் பாரதூரமானது, பயங்கரமானதாகும்.



எனவே ஈழத்தமிழர்களின் உழைப்பை இனியும் இப்படிப் பிறர் சுரண்டிச் செல்லாதிருக்க எல்லோரும் முயற்சிக்க வேண்டும். இதற்கான முயற்சிகள் பல விதத்திலானவை. பல முனைகளிலானவை. இதற்கும் பல சவால்களைச் சந்திக்க வேண்டும் ஈழத்தமிழர்கள். அத்துடன், நமது இயற்கைச் சூழலையும் பண்பாட்டுச் சூழலையும் பாதுகாக்கவும் நாம் முயலவேண்டும். இதுவொரு முதற்பணியே.



ஆனால், தமிழ் அரசியலும் அதன் தலைமைத்துவங்களும் இந்த மாதிரியான எவ்வளவோ அடிப்படைப் பிரச்சினைகளைப் பற்றிய எந்தவிதமான அக்கறைகளுக்கும் அப்பாலான வெளியில்தானிருக்கின்றன.



யுத்தம் முடிந்தாலும் யுத்தத்தின் நெருக்குவாரங்களை விடவும் இந்தமாதிரி நெருக்குவாரங்கள் பயங்கரமானவை. இவை கண்ணுக்குத் தெரியாதவை. ஆனால், நீண்டகால அடிப்படையில் ஒரு சமூகத்தை முடக்கக்கூடியவை.





http://www.vannionline.com/

No comments:

Post a Comment