Saturday, April 24, 2010

புலி உறுப்பினர்களை மலேசியா இலங்கைக்கு நாடு கடத்தியது இப்போது ஒப்புக்கொள்கிறது அந்த நாடு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் கடந்த ஆகஸ்ட் மாதத்துக்குப் பின்னர் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனரென அந்நாட்டு அரசு பகிரங்கமாக நேற்று அறிவித்தது.


புலிகளின் தலைவர் பிரபாகரனின் மறைவுக்குப் பின்னர் அந்த இயக்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரையும் தாங்கள் கைது செய்து நாடு கடத்தி உள்ளார்களென மலேசிய உள்துறை அமைச்சர் ஹிஸாமுடீன் குஷெய்ன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஒகஸ்ட் மாதத்துக்கும் மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஏராளமான புலிகளைத் தாங்கள் கைதுசெய்து நாடு கடத்தினர் எனவும், மலேசிய அரசின் இந்நடவடிக்கையை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பெரிதும் பாராட்டினார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும் அந்த அறிக்கையில் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட புலிகள் பற்றிய விவரங்கள் எவையும் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. அதேநேரம், மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் மேஜர் ஜெனரல் ஜி.வி.டி. யூ. ஏ. பெரேரா உள்துறை அமைச்சரின் இவ்வறிக்கை குறித்து கருத்துக்கூற மறுத்துள்ளார்.

ஆனால் பெயர் குறிப்பிட விரும்பாத மலேசிய உயரதிகாரி ஒருவர் ஊடகங்களுக்குக் கருத்துக் கூறுகையில், புலிகளின் முக்கிய பெருந்தலைவர் ஒருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார் என்றார்.

இருப்பினும், அப்புலித் தலைவரின் பெயரைக் குறிப்பிட அவர் மறுத்துவிட்டார்.

புலிகளின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான கே.பி. எனப்படும் கே. பத்மநாதன் கடந்த ஆகஸ்ட் மாதம் கோலாலம்பூரில் வைத்து கைதுசெய்யப்பட்டு இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டாரென நம் பப்படுகின்றது.


http://www.tamilwin.com/

No comments:

Post a Comment