Tuesday, April 27, 2010

காயமடைந்த படையினரை கைவிட்டுள்ளது: சிறிலங்கா

சிறிலங்கா அரசு தனது போர் வெற்றியை தொடர்ச்சியாக கொண்டாடி வருகின்றது ஆனால் அதில் இறந்த மற்றும் காயமடைந்த தனது படையினரை அரசு கைவிட்டுள்ளதாக தொன்னிலங்கை தகவல்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது:

இடம்பெயர்ந்த தமிழ் மக்களை புறம்தள்ளியதை போலவே சிறிலங்கா அரசு காயமடைந்த தனது படையினரையும் கைவிட்டுள்ளது. சிறீலங்கா அரசு தொடர்ச்சியாக போர் வெற்றியை கொண்டாடி வருகின்றது. ஆனால் கடந்த மூன்று வருடங்கள் நடந்த கடுமையான போரில் கொல்லப்பட்ட 6,200 படையினரின் குடும்பங்களையும், 30,000 இற்கு மேற்பட்ட காயமடைந்த படையினரையும் அது கைவிட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் பெருமளவானோர் அவயவங்களை இழந்துள்ளனர். பார்வையையும், கேட்கும் சக்தியையும் இழந்துள்ளனர். 300 இற்கு மேற்பட்டவர்கள் தமது இயங்கும் சக்தியை இழந்துள்ளனர்.

போரின் இறுதிக்கட்டத்தில் கடந்த இரு வருடங்களில் சிறிலங்கா இராணுவத்தில் 80,000 பேர் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தனர். பெரும் தொகையான படையினரை இணைத்துக் கொண்டதனால் தான் போரில் வெற்றிபெற முடிந்ததாக அரசு தெரிவித்துள்ளது.

தென்னிலங்கையில் உள்ளவர்களின் வேலையில்லா பிரச்சனைகளுக்கு அது ஒரு தீர்வாகவும் இருந்தது என 1991 ஆம் ஆண்டு இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் தனது கால் ஒன்றை இழந்த ஆனந்த தென்னகோன் (40) தெரிவித்துள்ளார்.

இறந்த அல்லது காணாமல்போன படையினருக்கு அரசு காப்புறுதி நிதி மூலம் 750 அல்லது 1,200 டொலர்களை வழங்கி வருகின்றது. அதன் பின்னர் அவர்களின் உறவினர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகின்றது. காயமடைந்த படையினருக்கும் காப்புறுதி நிதியும், ஊதியங்களும் வழங்கப்படுகின்றன. ஆனால் அவை மருத்துவச் செலவுகளுக்கு போதுமானதல்ல.

தனக்கு தேவையான சிறப்பு சக்கர வண்டியை பெறுவதற்கு 10 மில்லியன் ரூபாய்கள் (90,000) டொலர்கள் தேவை அதனை உள்ளூர் நிறுவனங்கள் தயாரிப்பதில்லை என காயமடைந்த படை சிப்பாய் மஞ்சு லக்ஸ்மன் (32) தெரிவித்துள்ளார்.

ஊனமுற்ற படையினரை பராமரிப்பதே தமது முதல் பணி என இராணுவத்தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார். ஆனால் அவர் காணாமல் போன படையினர் தொடர்பாக அவர் எதனையும் தெரிவிக்கவில்லை.

காணாமல்போன படையினரின் எண்ணிக்கைகள் இறந்த படையினரை விட அதிகமாகும்.

2008 ஆம் ஆண்டுக்கான சிறீலங்காவின் பாதுகாப்பு செலவீனம் 1.6 பில்லியன் டொலர்களாகும். அது கடந்த ஒக்டோபர் 20 விகிதத்தால் அதிகாரித்துள்ளது. காயமடைந்த படையினரை பராமரிப்பது, இறந்த படையினருக்கு நிதிகளை வழங்குவது, இராணுவத்தின் பலத்தை தக்கவைப்பது போன்ற விடயங்களால் சிறீலங்காவின் பாதுகாப்பு செலவீனம் அதிகரித்துள்ளது.

இராணுவம் 10 மில்லியன் டொலர்களை உலகம் முழுவதும் பரந்து வாழும் சிங்கள மக்களிடம் திரட்டிய போதும் அது சில டசின் குடும்பங்களுக்கே போதுமானது.

எனது குடும்பம் மிகவும் வறுமையானது, அவர்களால் என்னை பராமரிக்க முடியாது என கழுத்திலும், முள்ளம்தண்டிலும் துப்பாக்கி சன்னங்கள் பாய்ந்த கப்டன் தனுஷ்கா பெரேரா (33) தெரிவித்துள்ளார். அவர் ராகம வைத்தியசாலையில் தங்கியுள்ளர்.

எனது பெற்றோர்கள் எனது ஊதியத்தில் தான் வாழ்ந்து வருகின்றனர். நாம் செங்கற்களால் கட்டப்பட்ட வீட்டில் கூட இதுவரை வாழ்ந்ததில்லை, எனக்கு சென்று தங்குவதற்கு இடமில்லை அதனால் வைத்தியசாலையில் தொடர்ந்து தங்கியுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே மகிந்த ராஜபக்சாவின் எதிர்காலத் திட்டங்கள் அவர் எதிர்கொள்ளப் போகும் சவால்களை சந்திப்பதற்கு போதுமானவை அல்ல என அவை மேலும் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment