Thursday, March 18, 2010

இந்தியா ஈழத் தமிழர்களின் நண்பனா? எதிரியா? துரோகியா?

இந்தியா என்ற தேசத்தை நேற்றுவரை நேசித்த ஈழத் தமிழர்கள் இன்று கேட்கும் கேள்வி இதுதான். அதற்கு விடை தரவேண்டிய தார்மீக கடப்பாடு இந்தியாவுக்கு இப்போதும் இருப்பதாகவே ஈழத் தமிழர்கள் உணர்கின்றார்கள். அதனால், இந்தியாவை நோக்கித் தமது கேள்விகளைத் தொடுக்க வேண்டிய கட்டாயத்திலும் உள்ளார்கள்.

அதில், மூன்றாம் தரப்பு ஒருவர் வாதிக்க வருவதோ, வக்காலத்து வாங்க முற்படுவதோ இந்தியா என்ற தென்னாசியப் பிராந்திய வல்லரசின் இருப்பையே அவமானப்படுத்துவதாக அமைந்து விடும் என்பதே எனது தாழ்மையான கருத்தாகும். நான் ஒரு ஈழத் தமிழன் என்பதால், இந்தியாவை அளவுக்கு அதிகமாக நேசித்ததும், அதே காரணத்தால் அதற்கும் அதிகமாக நம்பியதும், அதையே தனக்குக் கிடைத்த சந்தர்ப்பமாக எண்ணி இந்தியா எம்மைப் பயன்படுத்தி இலங்கையை அடிபணிய வைக்க எண்ணியதையும் நாங்கள் ஆட்சேபிக்காமல் ஏற்றுத்தான் இருந்தோம். எங்கள் வீட்டுச் சுவர்களிலெல்லாம் அப்போது காந்தியும், நேருவும், இந்திரா காந்தியுமாகத் தொங்கிச் சிரித்தார்கள். அப்போதெல்லாம், எங்களுக்கு எங்கள் நாட்டின் பிரதமர்கள் நினைவுக்கு வருவதே சிரமமான அளவிற்கு நாம் இந்திய நேசத்தால் இலங்கை அரசியலிலிருந்தே அந்நியமாகிக் கிடந்தோம். இலங்கைத் தீவில் ஒரு தேசியக் கொடி இருப்பதையே மறந்து, இந்தியக் கொடி அசைந்து ஆடுவதை ரசித்துப் பார்த்தோம். இலங்கைத் தீவின் தேசிய கீதத்தின் ஒரு வரி கூட அறிய விரும்பாத நாங்கள் இந்திய தேசிய கீதத்தை இசைத்து மகிழ்ந்தோம்.

அதனால்தான், ஈழத் தமிழர்கள் வலி கண்ட போதெல்லாம் இந்தியாவின் திசை நோக்கி வரம் கேட்டோம். காக்கும்படிதானே கேட்டோம்… காவு கொடுக்க எப்படி மனம் வந்தது இந்திய தேசத்திற்கு? முள்ளிவாய்க்கால் இறுதிக் கணத்தில்கூட அந்த மண்ணில் வீழ்ந்த ஒவ்வொரு மனிதமும் ‘இந்திய தேசமே! ஏன் இப்படி எங்கள் வாழ்வைப் பலி கொள்ள முடிவெடுத்தாய்?’ என்ற கேள்வியுடனேயே சிதறிப் போனது. அந்தக் கொலைக்களத்தில் தப்பிப் பிழைத்த மனிதர்கள் முள்வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்டு, சிதைபட்ட நிலையிலும் ‘இந்திய தேசமே! எதற்காக எங்களைச் சிதைக்கும் முடிவெடுத்தாய்?’ என்ற விடைதெரியாத கேள்விகளுடனேயே மவுனமாகிப் போனார்கள்.

நாங்கள் எங்கேயோ தப்புப் பண்ணிவிட்டோம் என்பது நன்றாகவே தெரிகின்றது. கடந்த அறுபது வருடங்களாக நாங்கள் தொடர்ந்தும் இந்தியாவிடம் தானே இறைஞ்சி நின்றோம். இந்தியாவைத்தானே நம்பியிருந்தோம். எங்களுக்கு அழிவைத் தவிர எதுவும் கிடைக்கவில்லையே? மீண்டும் மீண்டும் அதே தவறு, அதே நம்பிக்கை, அதே இறைஞ்சல்… இன்னமும் எத்தனை ஆண்டுகள் நாங்கள் தவறுகளை மட்டுமே செய்யப் போகின்றோம்?

இந்தியாவுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் என்ன பகை? எதற்காக இத்தனை அழிவுகள்? எதற்காக ஈழத் தமிழர்கள் எதிர்காலமற்று சிதைக்கப்பட்டார்கள்? எதற்கும் பதில் எங்களிடம் இல்லை. நாங்கள் தவறான திசையில் பயணித்து, முட்டி மோதி, இழப்புக்களுடன் பின் நோக்கியே நகர்ந்து வந்துள்ளோம். இந்தியப் பின்னணியுடன் எண்பதுகளில் எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில்கூட எமக்கு இந்த நிலை இருக்கவில்லையே? ஏன் இன்று இப்படிப் புதைந்து போயுள்ளோம்?

இந்தியாவுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இப்படி ஒரு விரிசல் எப்படி உருவானது? அதற்கு யார் காரணம்? என்ற கேள்விகளுக்கெல்லாம் ஒரே கட்டுரையில் ஆராய்வது என்பது முடியாத காரியம். ஆனால், அந்த விரிசல் நிலையானது. மீண்டும் ஒட்ட வைக்க முடியாதது என்பதே இன்றுள்ள இலங்கையின் கள நிலவரம். தனது பிடிக்குள் சிக்க மறுத்துத் திமிறிக்கொண்டிருந்த சிங்கள ஆட்சியாளர்களை வழிக்குக் கொண்டுவரும் கயமாகத் தன் அரசியல் வியூகத்தை ஆரம்பித்து வைத்த இந்தியா தற்போது சிங்கள ஆட்சியாளாகளின் அரசியல் வியூகத்திற்குள் சிறை பட்டுப் போயுள்ளார்கள் என்பதே யதார்த்தம். சிங்கள ஆட்சியாளர்களைச் சாந்தப்படுத்துவதற்காக, இந்தியா ஈழத் தமிழர்களது தேசிய அபிலாசைகளை சிங்கள தேசத்தின் விருப்பத்திற்கு விட்டுவிட்டது. அத்துடன், தனது வகிபாகத்தையும் மட்டுப்படுத்திக் கொண்டது.

இந்தியாவைப் பொறுத்தவரை, சிங்கள ஆட்சியாளர்களை மிரட்டுவதற்குரிய துருப்புச் சீட்டுகளான தமிழீழ மக்கள் எப்போதும் தன் கையில் இருந்தால் போதும் என்பதே அதன் நிலைப்பாடாக உள்ளது. அதாவது, இலங்கைத் தீவில் இனப் பிரச்சினை எப்போதுமே கொதி நிலையில் இருக்க வேண்டும். அங்கே சமாதானமும் ஏற்படக் கூடாது. பிரச்சினைகளும் முடிவுக்கு வந்துவிடக் கூடாது என்பதே அதன் நீண்ட கால விருப்பமாக உள்ளது. அதனால்தான், கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் வெற்றி நகர்வுகளுக்கு முட்டுக்கட்டை போட்டுப் போரைத் தொடரும் களநிலையை ஏற்படுத்தியது. சமாதான காலத்திலும், நியாயமான எந்தப் பங்களிப்பும் வழங்காமல், அனுசரணையாளர்களை மிரட்டும் பாணியைக் கடைப்பிடித்தது. முள்ளிவாய்க்கால் இறுத்க் கணம் வரை அந்த யுத்தத்தை உலக நாடுகளால் தடுத்து நிறுத்த முடியாதபடி இந்தியாவே தடுத்து நிறுத்தியது. அதன் பின்னரும், இன்றுவரை சிங்கள தேசத்தின் மீதான யுத்தகால மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களையும் இந்தியாவே தடுத்து வருகின்றது.

இந்தியாவுடனான இந்த முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய விடுதலைப் புலிகள் முயன்றாhகள். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் பெரு முயற்சி எடுத்தார். பாலா அண்ணா அவர்கள் சமாதான காலப்பகுதியில் இந்தியாவுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதில் மிக தீவிரமாக செயற்பட்டார். அவரது இறுதிக் கால கட்டத்தில் இந்தியாவின் சில தலைவர்களுடன் தொடர்புகளை பேணத் தொடங்கினார். திரு கே. நாராயணனுடன் தொடர்புகளை பேணிவந்தார். இது அவரின் இராஜதந்திர நகர்வாக அமைந்தது. பாலா அண்ணர் அவர்கள் தான் சமாதான காலங்களில் இந்தியாவை நோக்கிய நகர்வுகளை யாழில் இருந்து சமாதான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட பத்திரிகை நண்பர் அவர்களிற்கு தெளிவாக தான் மரணம் எய்துவதற்கு முன்னர் விளக்கி இருந்தார். ஆனாலும், அவர் இறக்கும்வரை அவரது எந்த அணுகுமுறையும் இந்தியாவால் ஒருபோதுமே ஏற்றுக் கொள்ளப்பட்டதில்லை. முள்ளிவாய்க்கால் வரை எமது மக்களைத் துரத்திச் சென்று, கொடூரமாகக் கொன்று அழித்த பின்னரும் இரத்தப்பசி நீங்காத இந்தியாவை சமாதானப் படுத்த நம்மால் என்ன செய்ய முடியும்?

இலங்கைத் தீவில் தன்னைப் பலப்படுத்திக் கொள்ள விரும்பும் இந்தியாவால் தமிழீழ மக்களது பிரச்சினையில் சிங்கள தேசத்தின் மாகாண சபைக்கு மேலான ஒரு தீர்வைக் காணவே முடியாது. அதற்கு மேல் கோரிக்கை வைக்கும் நிலமையிலும் கள நிலவரம் இல்லை. அம்பாந்தோட்டைத் துறைமுக நிர்ணயிப்புடன் ஆரம்பித்த சீனாவின் கால்பதிப்பு இப்போது வடக்கே யாழ்ப்பாணம்வரை நீண்டு செல்கின்றது. இலங்கைத் தீவு மெல்ல மெல்ல சீனாவின் பிடிக்குள் சென்று கொண்டிருப்பதைத் தடுக்க மீண்டும் இந்திய ஈழத் தமிழர்களைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திக் கொள்ள முற்படுகின்றது. இலங்கை முற்று முழுதாக சீனாவிடம் வீழ்ந்துவிடாமல் இருப்பதற்கான இந்திய நகர்வில் ஈழத் தமிழர்களின் நலன்களைத் தேட முடியாது. வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பது, சிங்களக் குடியேற்றங்களைத் தடுப்பது, தமிழ்த் தேசியத்தைச் சிதைவிலிருந்து காப்பாற்றுதல் என எதுவுமே இந்திய நலன்கள் சார்ந்த விடயங்கள் அல்ல. சாம்பூரில் வாழ்ந்த தமிழ் மக்கள் பலோத்காரமாக விரட்டியடிக்கப்பட்டு, அகதிகளாக அலையவிடப்பட்டுள்ள நிலையில், அந்தக் கிராமத்தில் அனல் மின்நிலையம் அமைக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டிருக்க முடியாது.

சிங்கள தேசம் விரும்பும் ஒரு தீர்வை ஈழத் தமிழினம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால், அதற்கு இந்தியா எதற்கு? இத்தனை இழப்புக்கள் எதற்கு? இத்தனை அழிவுகள் எதற்கு? இந்தியாவை நம்பியதால்தானே எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள்? இந்தியாவை நம்பியதால் தானே நாங்கள் இருந்தது அத்தனையும் இழந்து உயிர்களையும் பறிகொடுத்தோம்? இந்தியாவை நம்பியதால் தானே நாங்கள் ஆதரவின்றிப் போனோம்?

நாங்கள் தப்பான பாதையில் தொடர்ந்தும் பயணிக்க முடியாது. அந்தப் பாதையில் அழைத்துச் செல்ல முற்படும் எவரையும் தமிழீழ மக்கள் நிராகரிப்பார்கள். இந்தியாவையும், அதன் பரம எதிரிகளான சீனாவையும், பாக்கிஸ்தானையும் ஒரே தூரத்தில் வைத்து சிங்களத்தால் தன்னுடைய காரியங்களைச் சாதிக்க முடியுமானால், எம்மாலும் மாற்றங்களை உருவாக்க முடியும். அதற்கான பாதைகளை நாங்கள் புதிதாக அமைக்க வேண்டும். இந்தியா என்ற மாயைக்குள் எங்கள் எதிர்காலத்தைத் தொலைத்துவிட முடியாது. முப்பது வருடங்களாக இந்தியாவின் கரங்கள் பற்றி முள்ளிவாய்க்காலில் அழிந்துபோன் எம் உறவுகள் இழந்ததை விடவா, இந்தியாவை நிராகரிப்பதால் இழந்துவிடப் போகின்றோம்?

நாங்கள் தீர்மானிப்பதற்கு முன்பாக ‘இந்தியா ஈழத் தமிழர்களின் நண்பனா? எதிரியா? துரோகியா? என்பதை இந்தியா தீர்மானிக்க வேண்டும். வெளிப்படையாக அறிவிக்கவேண்டும். அதுதான் இந்தியா விரும்புவதுபோல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி பெறுவதற்கும் துணையாக இருக்கும்.



நன்றி பரீஸ் ஈழநாடு

No comments:

Post a Comment