இந்தியாவின் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து நடந்த விவாதத்தில் இலங்கைத் தமிழர்களின் துயரையும், அவர்களுக்கு அந்நிலை ஏற்படக் காரணமான நிகழ்வுகள் குறித்தும், அதில் இந்தியாவிற்கு இருந்த பங்கு குறித்தும் தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள் மட்டுமின்றி, மற்ற மாநிலங்களின் உறுப்பினர்களும் வருத்தத்துடனும் கோபத்துடனும் எடுத்துரைத்துள்ளனர்.
மாநிலங்களவையில் நடந்த இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான வெங்கையா நாயுடு, “அங்கிருந்து (இலங்கை) வரும் செய்திகள் நெஞ்சை உருக்குவதாக உள்ளன, அப்பாவித் தமிழர்கள் பெரும் அளவிற்கு கொல்லப்பட்டுள்ளனர். அங்கு நடந்து வருவது இனப் படுகொலையே தவிர வேறொன்றும் இல்லை. ஆனால் இதனை சர்வதேச சமூகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.
பா.ஜ.க.வைச் சேர்ந்த மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சுஷ்மா சுவராஜ், “இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளைக் கண்டு இரத்தம் கொதிக்கிறது” என்று பேசியுள்ளார்.
கருணாநிதி சொல்லாததை சொன்ன இளங்கோவன்!
இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை உலக நாடுகள் அனைத்தும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. அதிலும் குறிப்பாக இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது என்று சாடினார் திமுக உறுப்பினர் இளங்கோவன்.
“1940இல் ஜெர்மனியில் ஹிட்லரால் இலட்சக்கணக்கான யூத மக்கள் கொல்லப்பட்டபோது அந்தக் கொடுமையை உலக நாடுகள் அனைத்தும் கண்டித்தன. இப்போது இலங்கையில் பல்லாயிரக் கணக்கில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக மிக நெருங்கிய அண்டை நாடான இந்தியாவில் இருந்த நாம் தமிழர்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்” என்று தங்களையும் (திமுக) உள்ளடக்கிய மத்திய அரசு வேடிக்கை பார்த்ததை வருத்தத்துடன் சுட்டிக்காட்டியுள்ளார் இளங்கோவன்.
மறுமலர்ச்சி திமுக உறுப்பினர் கணேசமூர்த்தி பேசுகையில், “இந்திய அரசாங்கம் இலங்கை அரசுடன் கைகோர்த்துக் கொண்டு தமிழர்களை படுகொலை செய்து உள்ளது. இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்கின்ற தங்களது இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு உறுதுணையாக இருக்கின்றது என்று சிறிலங்க அரசாங்கம் தெரிவித்ததை இந்திய அரசு மறுக்கவில்லை” என்று கூறியவர், ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது அதனை எதிர்த்து இந்தியா வாக்களித்தது மன்னிக்க முடியாத துரோகம் என்று கூறியுள்ளார்.
எதற்கும் பதிலளிக்காத பிரதமரின் பதில்!
15வது மக்களவையின் முதல் கூட்டம் இது. மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் நிகழ்த்திய உரையில் இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை குறித்து இந்திய அரசின் நிலைப்பாட்டை (அது எத்தனை முரண்பாடுகளைக் கொண்டது என்பது வேறு விடயம்) விளக்கினார்.
அந்தப் பிரச்சனையின் மீது பல உறுப்பினர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு எந்தப் பதிலும் தராமல், “தமிழர்களின் சட்டபூர்வமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற, அவர்களும் சம உரிமை பெற்ற குடிமக்களாக வாழ துணிச்சலான நடவடிக்கைகளை சிறிலங்க அரசு மேற்கொள்ளும் என்றுதான் எதிர்பார்ப்பதாக”க் கூறி பிரதமர் மன்மோகன் சிங் முடித்துள்ளார்.
‘பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்’ எத்தனை ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்பது பற்றியோ, பாதுகாப்பு வலயத்தில் தஞ்சமடைந்த மக்கள் மீது கனரக ஆயுதங்களை பயன்படுத்தி கடைசி சில நாட்களில் நடந்த தாக்குதலில் பல பத்தாயிரக்கணக்கில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது பற்றியோ, அப்படி படுகொலை நடந்தபோது இந்தியா வேடிக்கை பார்த்தது என்று தனது கூட்டணிக் கட்சியின் உறுப்பினர் கூறியது பற்றியோ, அங்கே நடப்பது இனப் படுகொலைதான் என்று எதிர்க்கட்சியின் மூத்த தலைவர்கள் இருவர் குற்றம் சாற்றியது குறித்தோ, ஏன் சிறிலங்கா அரசிற்கு ஆதரவாக ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்தியா வாக்களித்து என்பதற்கோ எந்த விளக்கத்தையும் அளிக்காமல், சிறிலங்க அரசிற்கு ஒரு வேண்டுகோளை மட்டுமே விடுத்துவிட்டு, பிறகு தமிழர்களின் மறுவாழ்விற்காக ரூ.500 கோடி வழங்கப்படும் என்று மட்டும் கூறி முடித்திருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்.
முக்கியமான பிரச்சனைகளில் விவாதம் நடந்து முடிந்த பிறகு, விவாதத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூறாமல் தனது தரப்பு நியாயத்தை மட்டுமே கூறி முடித்துவிடுவது பொருளாதார நிபுணரான இந்தியாவின் பிரதமருக்கு புதியதல்ல. அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தப் பிரச்சனையிலேயே பல கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் – அவையின் நடைமுறை விதிகளில் வழங்கப்பட்ட ‘சுதந்திர’த்தை பயன்படுத்தி – தவிர்த்தவர்தானே மன்மோகன் சிங். அப்படியெல்லாம் ஜனநாயக நெறிகளை ‘மதித்து’ நடந்து கொண்ட பின்னரும் மீண்டும் வெற்றி பெற்று பிரதமரான பிறகு தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? எனவே பதில் அளிக்காமல் தவிர்த்துவிட்டார்.
இந்திய ஜனநாயகத்தின் அடையாளமாகக் கருதப்படும் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் கூட, அன்னிய நாட்டு அரசான சிறிலங்காவிற்கு ‘அளித்த உதவிகளை’ வெளியே சொல்ல முடியாத நிலை இந்திய அரசிற்கு இருக்குமானால் அது அங்கு நடந்த தமிழினப் படுகொலைக்கு துணை போயுள்ளது என்ற குற்றச்சாற்று உறுதியானது, உண்மையானது என்பதும், அதனை மெளனமாக ஒப்புக் கொள்கிறது என்பது அப்பட்டமான உண்மையாகி விட்டதே. அதனால்தானே அது ஐ.நா.வின் மனித உரிமை மன்றத்தில் தன்னோடு நல்லுறவு இல்லாத பாகிஸ்தான், சீனா ஆகியவற்றுடன் இணைந்து கொண்டு இனப் படுகொலை நடத்திய சிறிலங்கா அரசை காப்பாற்றியது!
இதற்கான மன்மோகன் சிங்கை பாராட்டலாம். ‘உறுப்பினர்களே… உங்களுடைய கேள்விக்கு என்னிடம் பதிலில்லை’ என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார். இலங்கைப் பிரச்சனை குறித்தும் தனக்கு அவ்வளவாகத் தெரியாது என்பதையும் அவர் பேச்சில் வெளிப்படுத்தியுள்ளார்.
மன்மோகன் கூறுகிறார்: “சிறிலங்கா மக்களுடன் நமக்கு பல நூற்றாண்டுகள் பழமையான உறவு உள்ளது, அந்நாட்டில் வாழும் தமிழ் மக்களின் நலனில் நமக்கு ஆழ்ந்த அக்கறை உண்டு. தமிழர்களின் நலன் என்பது விடுதலைப் புலிகளை விட பெரியது” என்று கூறியுள்ளார்.
யாருடன் இந்தியாவிற்கு நட்பு?
இலங்கையுடன் இந்தியாவிற்கு பல நூற்றுக்கணக்கான ஆண்டு பழமையான உறவு உள்ளது என்றால் எப்படி? யாரை வைத்து? தமிழரைத் தாண்டி இலங்கையில் வாழ்வோருக்கும் இந்தியாவில் வாழ்வோருக்கும் எந்த உறவு எந்த நூற்றாண்டில் இருந்தது? தமிழர்களின் நலனை என்றைக்கு இந்திய அரசு பேணிப் பாதுகாத்தது? இங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டு இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் 150 ஆண்டுகளுக்கு மேல் உழைத்த மக்களின் குடியுரிமையை ஒரு ஒப்பந்தம் போட்டு விட்டுத் தந்துவிட்டு வந்ததில் இருந்து, சம உரிமை கோரி போராடிய மக்களை ஒடுக்கி வதைத்து, பேரின பயங்கரவாதத்திற்கு உள்ளாக்கி, இனப் படுகொலை திட்டமிட்ட நடத்திவரும் சிறிலங்க அரசுகளுடன் இத்தனை ஆண்டுக் காலமாக கூடி குலாவிவரும் இந்திய அரசு, யாருடைய நலனை இதுவரை காத்துள்ளது? தமிழர்களின் நலனையா? அப்படி எப்பொழுதாவது நடந்திருந்தால் தமிழர்களை பகையாளிகளாகப் பார்க்கும் ஒரு மத, அரசியல் கொள்கை கொண்ட சிங்கள பேரினவாத சிறிலங்கா ஆட்சியாளர்கள் எப்படி இந்தியாவை நட்பு நாடாக கருதியிருப்பார்கள்?
பிரதமர் அலுவலக அதிகாரிகள் எழுதிக் கொடுக்கும் அறிக்கையில் உள்ள ஆங்கில வார்த்தை வசனங்களால் நடந்தது எதையும் மறைத்து விட முடியாது பிரதமர் அவர்களே.
பல ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களை ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற போர்வையில் கொடூரமாக கொலை செய்வதை எல்லா விதத்திலும் ஆதரித்து அனுமதித்துவிட்டு, இப்போது அவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்று கூறுவது எப்படிப்பட்ட மேன்மைமிகு கண்துடைப்பு என்பதை தமிழர்களும், உலகத்தவரும் புரிந்துகொண்டுள்ளனர்.
இனப் படுகொலையில் இந்தியாவின் பங்கு
சிறிலங்க அரசு திட்டமிட்டு மேற்கொண்ட இனப் படுகொலையில் இந்திய அரசின் பங்கு எந்த அளவிற்கு இருந்தது என்பதை அந்நாட்டு அமைச்சர்களில் இருந்து இராணுவத் தளபதி வரை அனைவரும் வெளிப்படையாகக் கூறி வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டனரே.
ஈழத் தமிழர்களுக்கு எதிரான இந்த இனப் படுகொலையை தலைமையேற்று நடத்திய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ச சண்டே லீடர் பத்திரிக்கைக்கு அளித்து பேட்டியிலேயே கூறிவிட்டார். அனைத்தும் இந்தியாவிற்கு தெரியப்படுத்திய பிறகுதான் மேற்கொள்ளப்பட்டது என்பதை உலகிற்கு போட்டுக் கொடுத்துவிட்டார்.
இந்தியாவின் ‘கவலை’ அப்பாவி மக்களைப் பற்றியதே என்று கோத்தபாய கூறினாலும், “மருத்துவமனை கூட இராணுவ இலக்கே” என்று கூறிய அந்த மனித மிருகத்திடம்தான் அப்பாவி மக்களை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு நமது நாட்டு தூதர்கள் மகிழ்ச்சியுடன் நாடு திரும்பினர் என்பதெல்லாம் ஏற்கனவே பதிவான வரலாறுகள்.
எனவே ஒரு 500 கோடி ரூபாயை அளித்து இரத்தக் கறை படிந்த இந்தியக் கரங்களை கழுவி விட முடியாது. போரின் இறுதிக் கட்டத்தில் முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்ட பல பத்தாயிரக்கணக்கான தமிழர்களின் சடலங்களை தடம் தெரியாமல் அழிக்கும் முயற்சி நமது ஜனநாயக நாட்டின் நல் ஆசிர்வாதத்துடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை உலகு அறியும். அது கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்திற்கு வருகிறது.
நடக்கட்டும். சடலங்களின் தடங்களை அழித்துவிடலாம். ஆனால் அவைகள் பற்றிக்கொண்டிருக்கும் உண்மை வெளிப்பட்டே தீரும். அன்றைக்கு தான் இனப் படுகொலைக்கு துணை போன நமது நாட்டுத் தலைமையின் நாகரீகமற்ற நடவடிக்கைக்காக இந்திய நாடு வெட்கித் தலை குனியும் நாள் வரும்.
Friday, March 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment