Monday, March 8, 2010

இந்தியாவுக்கு எதிரான போரில் அம்பாந்தோட்டை துறைமுகம் சீன கடற்படையின் தளம் ஆகும்? – பிரித்தானிய ஏடு ஆராய்கிறது

வர்த்தக மற்றும் கடல்சார் உடன்பாடுகளை வேறு நாடுகளுடன் மேற்கொள்வதன் மூலம் தனது பழைய விரோதியாகிய இந்தியாவினைச் சுற்றி சீனா ஒரு வலையினைப் பின்னி வருகிறது.

தந்திரோபாயமான ரீதியில் - கட்டுமானத் திட்டங்களையும் துறைமுக வசதிகளையும் மேம்படுத்தும் செயல் திட்டங்களை, இந்தியாவின் சொந்தக் கடற் பிராந்தியத்தில் சீனா ஏற்படுத்தி வருகின்றது.

முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் [Bush] நிர்வாகம் ஆட்சியிலிருந்த காலப் பகுதியில் - இந்தியாவினைச் சுற்றி சீனா முன்னெடுக்கும் இவ்வாறான ஒவ்வொரு செயல் திட்டத்தினையும் ஒரு ‘முத்து’ என்றும், சீனா இந்த முத்துக்களைக் கோர்த்து ஒரு மூலோபாய வலைப் பின்னலை ஏற்படுத்த முனைகிறது என்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் விபரித்திருந்தனர்.

இது பின்னர் சீனாவின் ‘முத்துமாலை’ மூலோபாயம் – “string of pearls” என பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

“மறைமுகமான ஒரு தந்திரோபாயத்தின் ஒரு பகுதி தான் இந்த ‘முத்துமாலை முலோபாயம்’. இவ்வாறாக இந்தியாவினைச் சுற்றி சிலந்தி வலை போன்ற பலமான வலைப் பின்னலைப் பின்னுவதன் மூலம் – இரு நாடுகளுக்கும் இடையில் நெருக்கடி நிலை தோன்றுமிடத்து – இந்தியாவினை இந்த வலைக்குள் சிக்க வைப்பதை இலக்காகக் கொண்டதே இந்தத் தந்திரோபாயம்” என ஹொங்கொங்-இல் உள்ள Baptist University பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானப் பேராசிரியர் Jean-Pierre Cabestan தெரிவிக்கிறார்.

இவ்வாறு பிரித்தானியாவில் வெளியாகும் Guardian Weekly ஏட்டிற்காக Bruno Philip எழுதியுள்ள ஓர் ஆய்வில் குறிப்பி்ட்டுள்ளார்.

Bruno Philip மேலும் எழுதியுள்ளதாவது:

துறைமுகங்களை மேம்படுத்தும் செயல் திட்டங்களை உள்ளடக்கிய இந்த முனைப்புக்கள் முழுமையான வர்த்தகம்-சார் இலக்குகளைக் கொண்டதே என சீனா வலியுறுத்தி வருகின்றது.

இருப்பினும் - சீனாவிற்குத் தேவையான மசகு எண்ணெயினைப் பெற்றுக்கொள்வதற்கான பிரதான வழங்கல் பாதையாக இந்து சமுத்திரம் இருந்துவரும் நிலையில், தென்னாசியப் பிராந்தியத்தில் மோதல் நிலை தோன்றுமிடத்து - இந்தியாவினைச் சூழவுள்ள நாடுகளில் தான் விரிவாக்கம் செய்துவரும் துறைமுகங்களை சீனா தனது இராணுவத் தேவைக்குப் பயன்படுத்தலாம் என அவதானிகள் கருதுகிறார்கள்.

பாகிஸ்தானின் Baluchistan மாகாணத்திலுள்ள Gwadar என்ற இடத்தில் சீனாவின் நிதியுதவியுடன மேற்கொள்ளப்பட்டுவரும் துறைமுக நிர்மாணம் இந்தியாவிற்கு அதியுச்ச கரிசனையினை ஏற்படுத்தியிருக்கிறது.

பர்மாவின் Sittwe, Mergui மற்றும் Dawei ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் துறைமுக நிர்மாணப் பணிகளிலும் பீஜிங் ஈடுபட்டிருக்கிறது.

இவை தவிர - அம்பாந்தோட்டைத் துறைமுகத்தினை மும்முரமாக அபிவிருத்தி செய்துவரும் சீனா இலங்கையில் வேறு அதிக திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது.

இந்தத் துறைமுக அபிவிருத்திப் பணிகளுக்கான செலவில் 85 வீதமான பணத்தினை சீனாவின் Exim வங்கி வழங்கியிருக்கிறது. அண்ணளவாக ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான பணம் வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்த வருடம் பிரிவினைவாத விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதற்கான போருக்கும் சீனா தன்னாலான நிதியுதவியினை வழங்கியிருக்கிறது.

பங்களாதேசின் சிட்டகொங் பிராந்தியத்தில் அமைந்திருக்கும் துறைமுகத்தினை ஆள்கடல் துறைமுகமாக நவீன மயப்படுத்துவதிலும் சீனா பங்களிப்பினைச் செய்திருக்கிறது.

சீனாவின் ‘முத்துமாலை’ மூலோபாயத்தில் இறுதியாக இணைக்கப்பட்டிருக்கும் முத்தாக நேபாளம் மாறியிருக்கிது. இது நான்கு புறமும் தரையால் சூழப்பட்ட நாடாக இருந்தாலும் சீனாவைப் பொறுத்த வரையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் நேபாளம் அமைந்திருக்கிறது.


2008ம் ஆண்டில் நேபாளத்தின் அண்டை நாடான திபெத்தின் தலைநகர் Lhasa-வில் பிரச்சனைகள்ஏற்பட்ட பின்னர் - நேபாளம் திபெத்துடனான தனது எல்லைகளை இறுக்க வேண்டும் என்றும், நேபாளத்தில் பௌத்த துறவிகள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டங்களை அடக்க வேண்டும் என்றும் சீனா நேபாளத்திற்குத் தொடர் அழுத்தங்களைப் பிரயோகித்து வந்தது.

கடந்த மாதம் நேபாளப் பிரதமர் Madhav Kumar Nepal பீஜிங்கிற்கான தனது விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். சீன ஊடகங்களின் தகவலின் படி- இந்த விஜயமானது சீன-நேபாள எல்லைப் பாதுகாப்புத் தொடர்பான ஓர் உடன்பாடு எட்டப்படுவதற்கு வழிவகுத்திருக்கிறது.

ஆனால், Chinese Global Times என்ற இணைய இதழில் கடந்த மாதம் எழுதப்பட்டிருந்த வெளியிடப்பட்டிருந்த தலையங்கம் - ‘இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஒரு மேலாண்மை நிலையினைப் பெறுவதற்குச் சீனா முனைகிறது என்ற அச்சம் இந்தியர்கள் மத்தியில் ஆழமாக ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இது போன்ற அச்சம் தேவையற்ற ஒன்றே. மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிலிருந்து பெறப்படும் சீனாவிற்குத் தேவையான மசகு எண்ணெய் விநியோகங்கள் அனைத்தும் இந்து சமுத்திரத்தின் ஊடாகவே மேற்கொள்ளப்படுவதால் சீனா அந்த பிராந்தியத்தைக் கூர்ந்து அவதானித்து வருகிறது, அவ்வளவு தான்” என்று கூறுகின்றது.

அப்படியானால் - ‘முத்துமாலை’ மூலோபாயத்தின் ஊடாக இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இராணுவ ரீதியான அச்சுறுத்தலைச் சீனா ஏற்படுத்த முனைவதாகக் கூறப்படுவது வெறும் மிகைப்படுத்தப்பட்ட செய்தியா?


“ஆபிரிக்காவிலோ அல்லது மத்திய கிழக்கிலோ ஓர் அவசரகால நிலைமை ஏற்படுமானால் – அங்கிருக்கும் தனது நாட்டு மக்களை மீட்கும் பணிகளுக்காகச் சீனக் கடற் படையின் தேவை எழுமெனில், மேலே குறிப்பிட்டவாறு இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளில் சீனா அபிவிருத்தி செய்து வரும் துறைமுகங்கள் சீனக் கடற்படைக்கான பின்-தளங்களாகச் செயற்படும்.

எவ்வாறிருப்பினும் இந்தப் பிராந்தியத்தில் மோதல் நிலையொன்று தோன்றுமிடத்து நிலைமைகள் மிகவும் மோசமடைந்து காணப்படும்” எனப் பேராசிரியர் Jean-Pierre Cabestan தெரிவிக்கிறார்.

புதினப்பலகை இணையத் தளத்திற்காக தி. வண்ணமதி-யினால் தமிழாக்கம் செய்யப்பட்டது

No comments:

Post a Comment