தமிழ் மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்தும் நோக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படவில்லை எனவும், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஏனைய சக்திகளிடமிருந்து தமிழ் மக்களை பாதுகாப்பதற்காகவே இவ்வாறு முகாம்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களை இராணுவ ரீதியில் அடக்குமுறைக்கு உட்படுத்தும் நோக்கில் நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவ முகாம்கள் குறித்த பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனவும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் ஆரம்பமான காலம் முதல் இராணுவ முகாம்கள் காணப்படுவதாகவும், இடம்பெயர் மக்கள் உள்ளிட்ட சகலரையும் பாதுகாக்கும் நோக்கிலேயே இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்த வலயத்தில் சுமார் 147 இராணுவ முகாம்கள் நிறுவப்பட்டுள்ளதாக அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
கிளிநொச்சி, மாங்குளம், முல்லைத்தீவு, கொக்காவில் போன்ற பிரதேசங்களில் மிக நீண்ட காலமாக இராணுவ முகாம்கள் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு காரணங்களினால் எத்தனை முகாம்கள் நிறுவப்பட்டுள்ளன என்பது குறித்த தகவலை வெளியிட முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்துவிட்டதாக பாரிய பரப்புரையினையும் வெற்றி விழாக்களையும் முன்னெடுத்த படைத்தரப்பும், அரச தரப்பும் தற்போது அதற்கு மாற்றான தகவல்களை இடையிடையே வெளிப்படுத்தி வருகின்றமையானது, அரச தரப்பினரிடையே விடுதலைப்புலிகள் என்கின்ற அச்சம் இன்னமும் முற்றாக நீங்கிவிடவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகின்றது.
அதேவேளை, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் ஆகியோர் "நாங்கள் பத்திரமாக இருக்கிறோம்" என தமிழக தலைவர் ஒருவர் உட்பட ஐந்து பேருக்கு கடிதம் அனுப்பியிருந்ததாகவும், விடுதலைப்புலிகள் அமைப்புக்கு புதிய தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் இந்திய, இலங்கை ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment