Wednesday, March 10, 2010

புலிகளின் நீதிமன்றில் வேலை செய்ததால் அகதி விண்ணப்பம் மறுப்பு

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வன்னி பெருநிலப்பரப்பு இருந்த காலகட்டத்தில், புலிகளால் பல கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன. அதில் நீதிமன்றமும் அடங்கும். வெகு சிறப்பாக பணிபுரிந்து வந்த தமிழீழ நீதிமன்றம் கிளிநொச்சியை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வந்தது யாவரும் அறிந்ததே. தற்போது அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகளில் பெண் ஒருவர் தமிழீழ நீதிமன்றத்தில் வேலை செய்தார் என்று கூறி அவரின் அகதி விண்ணப்பத்தை அவுஸ்திரேலிய அரசு நிராகரித்துள்ளது.

இதில் வேடிக்கையும், வேதனைக்கும் உரிய விடயம் என்னவென்றால், இப் பெண்ணால் அவுஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் நேரலாம் என அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இவர் வசித்ததாகக் கூறும் அவுஸ்திரேலிய அரசு, இவரை நாடுகடத்தும் முனைப்பில் ஈடுபட்டுள்ளதாக அதிர்வின் அவுஸ்திரேலிய நிருபர் தெரிவிக்கிறார். பல அகதிகளை ஏற்றிச் சென்ற ஓஷானிக் வைக்கிங் என்ற கப்பலில் இருந்து சுமார் 78 அகதிகளை அவுஸ்திரேலியா தாம் ஏற்றுக் கொள்வதாக கூறியது.

அவர்கள் அனைவரையும் கிறிஸ்மஸ் தீவில் வைத்து விசாரணை செய்து தற்போது இவர்போல பல அகதிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 2 பிள்ளைகளின் தாயாரான இவரின் கணவரின் விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் நீதிமன்றில் வேலைசெய்தார் என்ற காரணத்தால் அவர் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவது, ஒரு பொறுப்பற்ற செயலாகும். அத்தோடு இந்த விபரங்களை யார் அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கு கூறினார்கள் என்பதையும் நாம் உற்றுநோக்க வேண்டியுள்ளது. தமிழர்களுக்கிடையேயான ஒற்றுமை வலுப்பெறவேண்டும்!
www.athirvu.com

No comments:

Post a Comment